தமிழகம்

பஞ்சமி நிலங்களை மீட்க தனி சட்டம் தேவை: பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க தனியாக சட்டம் இயற்ற வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்தார்.

சட்டப்பேரவையில் தொழில், வருவாய், கனிமங்கள், சுரங்கங்கள் ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீது பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசியதாவது:

கோவை பகுதியில் 1994-ம் ஆண்டுக்கு பிறகு ‘மாஸ்டர் பிளான்’ வரவில்லை. ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை உள்ளடக்கி மண்டல திட்ட குழுமத்துடன் சேர்த்து செயல்படுத்தினால் அதுஒட்டுமொத்த தொழில் வளர்ச்சிக்கு பயன்படும்.

கோவை விமான நிலைய விரிவாக்கத்தில் முன்னேற்றம் இல்லை. நில எடுப்பு பணிகள் கடந்த 10 ஆண்டுகளாக நீடிக்கிறது.

விவசாயத்துக்கு முதல்முறையாக தனி பட்ஜெட் சமர்ப்பித்ததுபோல, அடுத்த ஆண்டு பெண்கள் நலன் சார்ந்த தனி பட்ஜெட்டை சமர்ப்பிக்க வேண்டும். ஆண்டாள்பெயரில் இளம் பெண் கவிஞர்களுக்காக தமிழ் வளர்ச்சி துறை ஒரு விருது அறிவிக்க வேண்டும்.

கோவையில் ரூ.20 கோடியில் பாதுகாப்பு புத்தாக்க மையம் தொடங்கப்பட்டது. சர்வதேச பாதுகாப்பு தளவாடங்களுக்காக ஒருகண்காட்சி நடத்தப்பட்டது. அதன்பிறகு தமிழகம் பாதுகாப்பு வழித்தடமாக அறிவிக்கப்பட்டு ரூ.2 ஆயிரம் கோடி முதலீடுகள் வந்துள்ளன. இதற்காக மத்திய அரசுக்கும், பிரதமருக்கும் நன்றி. ‘பிரதமரே திரும்பிச் செல்லுங்கள்’ என்றுசொன்னாலும்கூட, மேற்கண்ட திட்டம் மூலம் தமிழகத்துக்கு ரூ.2 ஆயிரம் கோடி கிடைத்திருப்பதை நன்றியுடன் நினைவுகூர்கிறோம்.

ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்களை மீட்டுஉரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அதற்கு கர்நாடகா,மகாராஷ்டிரா மாநிலங்கள் போலதனியாக சட்டம் இயற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT