மாமல்லபுரத்தில் சுற்றுலாத் துறை மற்றும் தனியார் அமைப்பினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தை குத்துவிளக்கேற்றித் தொடங்கிவைத்தார் சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன். 
தமிழகம்

தனியார் அமைப்புகளுடன் இணைந்து சுற்றுலாத் துறை மேம்படுத்தப்படும்: அமைச்சர் மதிவேந்தன் உறுதி

செய்திப்பிரிவு

தனியார் அமைப்புகளுடன் இணைந்து சுற்றுலாத் துறையை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.

சுற்றுலாத் துறை மேம்பாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நேற்று நடைபெற்றது. சுற்றுலாத் துறை ஆணையர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார்.

இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன், குத்துவிளக்கேற்றி கூட்டத்தை தொடங்கிவைத்தார். பின்னர் அமைச்சர் பேசியதாவது:

கரோனா ஊரடங்கு உத்தரவால் சுற்றுலாத் துறை கடும் இழப்பை சந்தித்துள்ளது. மேலும், அந்நிய செலவாணி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத் தலங்களை தனியார் பங்களிப்புடன் மீண்டும் பழைய நிலைக்கு மீட்டெடுக்க சுற்றுலாத் துறை தயாராக உள்ளது. மேம்பாட்டுப் பணிகளில் இணையுமாறு தனியார் அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.

தற்போது சுற்றுலாத் தலங்கள் படிப்படியாக பழைய நிலைக்குத் திரும்புகின்றன. விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் வரத்தொடங்கியுள்ளனர்.

சுற்றுலாத் தலங்களில் உள்ள விடுதிகள், உணவகங்கள், வணிக வளாகங்களில் பணிபுரியும் ஊழியர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், ஆட்டோ, கார் ஓட்டுநர்கள் உள்ளிட்ட அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம். மாமல்லபுரம் உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்களில் அரசால் விதிக்கப்பட்ட பாதுகாப்பு விதிமுறைகள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

முன்னதாக, சுற்றுலா தகவல்கள் அடங்கிய கையேட்டை அமைச்சர் மதிவேந்தன் வெளியிட, சுற்றுலாத் துறை ஆணையர் சந்தீப்நந்தூரி மற்றும் தனியார் நிறுவனப் பிரதிநிதிகள் பெற்றுக்கொண்டனர்.

SCROLL FOR NEXT