மூங்கிலால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள். 
தமிழகம்

கரோனாவால் முடங்கிய கிராம மக்களுக்கு மூங்கில் கைவினைப் பொருள் தயாரிக்கும் பயிற்சி

செ. ஞானபிரகாஷ்

கரோனாவால் முடங்கிய கிராம மக்களுக்கு அரசுப் பள்ளி ஆசிரியர் மூங்கில் மூலம் கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி தருகிறார்.

புதுச்சேரி சேலியமேடு கவிஞரேறு வாணிதாசன் அரசு மேல்நிலைப் பள்ளியில் நுண்கலை ஆசிரியராக பணியாற்றி வருபவர் உமாபதி. இவர் கிராமப்புற பகுதிகளில் தென்னை, பனை மரங்களிலிருந்து கிடைக்கும் பொருட்களை கலைப் படைப்புகளாக மாற்றுவதில் வல்லமை படைத்த மாணவர்களை உருவாக்கியுள்ளார். ஆசிரியர் உமாபதி வழிகாட்டுதல்படி பல கண்காட்சிகளில் மாணவர்கள் பங்கேற்றனர். அத்துடன் திருச்சி, சென்னை, புதுச்சேரி என பல நகரங்களில் தனியார் கல்லூரிகளில் கலை வகுப்புகளும் எடுத்துள்ளனர்.

கரோனா காரணமாக கிராமப் புறங்களில் ஆண்களும், பெண்களும் வெளியில் சென்று வேலை செய்ய முடியாமல் கிராமத்திலேயே முடங்கினர். வேலை இழந்து வருமானத்திற்கு தவிக்கும் இவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் சேலியமேடு அரசுப் பள்ளி வெளியே சிறப்பு பயிற்சியை அளித்து வருகிறார். தனிமனித இடைவெளியுடன் கரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கையுடன் இந்த பயிற்சியை நுண்கலை ஆசிரியர் உமாபதி இலவசமாக தருகிறார். குறிப்பாக மணிக்கூண்டு, டவர், பேனா, இருக்கை, ஊஞ்சல், பென்சில், தேர், பல்லக்கு என கலை நயம்மிக்க பொம்மைகளை அவர்கள் உருவாக்கியுள்ளனர்.

இதுபற்றி பயிற்சி அளித்த ஆசிரியர் உமாபதி கூறுகையில், “முன்பெல்லாம் கிராமத்தில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி கலைப் பொருட்களை உருவாக்கினோம். தற்போது மூங்கிலை வைத்து கலைப் படைப்புகளை உருவாக்கும் பயிற்சி தருகிறோம். எங்கள் அரசுப் பள்ளி குழந்தைகளின் பெற்றோர் பலரும் இதைக் கற்று சுயத்தொழிலாக செய்கின்றனர். குறிப்பாக கூடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், பேனா, பென்சில் போன்றவை செய்கிறார்கள். வீட்டில் குழந்தைகளுக்கும் அவர்களே கற்றுத்தர முடியும். தற்போது பணியில்லாத சூழலில் நேரத்தை பயன்படுத்தி கலைப் படைப்புகளை செய்து பொருளாதாரத்தை ஈட்டவும் இது உதவும். இப்படைப்புகள் செய்யும்போது மன அழுத்தம் குறைத்து அமைதி கிடைக்கும். பிளாஸ்டிக் இல்லாமல் இயற்கை பொருட்களை கொண்டு செய்யும் பேனா, பென்சில் போன்றவற்றை அரசு அனுமதி பெற்று அரசு அலுவலகங்களில் தரவும் திட்டமிட்டுள்ளோம்” என்று குறிப்பிட்டார்.

முன்னாள் மாணவ, மாணவிகளும் இப்பயிற்சி எடுக்க மக்களுக்கு உதவுகின்றனர். அவர்கள் கூறுகையில், “மூங்கில் மூலம் சைக்கிள், இருக்கை, லைட் ஹவுஸ், ஊஞ்சல், நாற்காலி போன்ற கலைப்பொருட்கள், அன்பளிப்பு பொருட்கள் செய்ய அனைவருக்கும் சொல்லித் தருகிறோம். கற்க விரும்பி பலரும் வருகிறார்கள். இதை செய்தால் மனசு லேசாகும். நல்ல பொழுதாக்கத்தையும் உருவாக்குகிறது. மாணவர்களுக்கு தன்னம்பிக்கையும் ஏற்படுகிறது” என்று குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT