கே.வி.குப்பம் அருகே எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் கடந்த 6 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் அரசினர் உயர்நிலைப் பள்ளியின் கட்டிட பணியை விரைந்து முடித்து மாணவர்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் வட்டத்துக்கு உட்பட்ட தேவரிஷிகுப்பம் கிராமத்தில் அரசினர் உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு,250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை இருந்தது.
இதனை ஏற்று அதே பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் புதிய கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது. கிராமத்துக்கு ஒதுக்குப்புறமாக தேர்வு செய்யப்பட்ட இடத்தில் கடந்த 2016-ம் ஆண்டு கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆமை வேகத்தில் நடைபெற்ற பணியில் கட்டிடம் தரமற்ற முறையில் இருப்பதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, குறைபாடுகளை சரி செய்து கட்டிடத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அதி காரிகள் உத்தரவிட்டனர். அதன் பிறகும் கட்டிட பணிகள் கடந்த 4 ஆண்டுகளாக மெதுவாக நடைபெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது. மேலும், இந்தப் பள்ளியில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்றும் புகார் எழுந்துள்ளது. கட்டிட பணிகள் தாமதமாக நடைபெறுவதால் புதர் மண்டிக் கிடப்பதுடன் சமூக விரோதிகளின் கூடராமாக பள்ளி கட்டிடம் மாறி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக தேவரிஷி குப்பம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் தர் என்பவர் கூறும் போது, ‘‘இந்த பள்ளி கட்டிடம் கட்டும் போது சுவற்றில் இருந்த சிமென்ட் பூச்சு உதிர்வதாக புகார் கூறப்பட்டது. இதுகுறித்து ஆய்வு செய்த அதிகாரிகள் குழுவினர் குறைபாடுகளை அகற்றி பணியை விரைவாக முடிக்க வேண்டும் என்று கூறினர்.
அதன் பிறகும் இந்த பணி தாமதமாக நடக்கிறது. இப்போது தான் மின் இணைப்பு வழங்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. மேலும், இந்த பள்ளிக்கு சுற்றுச் சுவர் இல்லை. பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்த கழிப்பறை வசதியும், தண்ணீர் வசதியும் சுத்தமாக இல்லை. இதை எல்லாம் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும். எந்த அடிப் படை வசதியும் இல்லாமல் 6 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் இந்த கட்டிட பணியை முடித்து விரைவில் மாணவர்கள் பயன் பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்’’ என்றார்.