தமிழகம்

போதைப் பொருள் விற்பனை முற்றிலும் தடுக்கப்படும்: ஜி.கே.மணிக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்

செய்திப்பிரிவு

போதைப் பொருட்கள் விற்பனை செய்வோர் மற்றும் கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, போதைப் பொருள் விற்பனை முற்றிலும் தடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ஜி.கே.மணி எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு துறை வாரியான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமை மற்றும் கிருஷ்ண ஜெயந்தி என இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு சட்டப்பேரவை இன்று (ஆக.31) கூடியது.

அப்போது கேள்வி நேரத்தில், தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக உறுப்பினர் ஜி.கே.மணி எழுப்பிய வினாக்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.

முதல்வர் கூறும்போது, ''திமுக அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து, 29-8-2021 வரை தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை தொடர்பாகக் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனை விற்பவர்கள், கடத்துபவர்கள் ஆகியோர் மீது 10 ஆயிரத்து 673 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன; 11 ஆயிரத்து 247 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து 149.43 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 113 நான்கு சக்கர வாகனங்களும், 106 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 15 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்றது மற்றும் கடத்தியது தொடர்பாக 2,458 வழக்குகள் போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் பதிவு செய்யப்பட்டு, 5,793 கிலோ கஞ்சா மற்றும் இதர போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 3,413 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களில் 81 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

போதைப் பொருட்கள் விற்பனை செய்வோர் மற்றும் கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, போதைப் பொருள் விற்பனை முற்றிலும் தடுக்கப்படும்'' என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT