சபாநாயகரிடம் நலம் விசாரிக்கும் ஆளுநர் தமிழிசை. 
தமிழகம்

திடீர் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி சபாநாயகர்: மேல் சிகிச்சைக்காக சென்னை அழைத்துச் செல்லப்பட்டார்

செ. ஞானபிரகாஷ்

திடீர் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி சபாநாயகர் செல்வம் மேல்சிகிச்சைக்கு சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. 4 ஆம் நாள் நிகழ்வுகளில் பங்கேற்ற சபாநாயகர் செல்வம் இன்று வந்த போது திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு புதுச்சேரி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இத்தகவல் அறிந்த ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, எதிர்க்கட்சித்தலைவர் சிவா மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து சபாநாயகர் செல்வத்தை சந்தித்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு இன்று பிற்பகல் அழைத்துச் சென்றனர்.

இதுதொடர்பாக சபாநாயகர் செல்வத்தின் தரப்பில் விசாரித்தபோது, "சபாநாயகர் செல்வத்துக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லேசான நெஞ்சு வலி இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். அதைத்தொடர்ந்து அவரை டாக்டர்கள் பரிசோதித்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து கண்காணித்து சிகிச்சை தந்தனர். இதயத்தில் ஸ்டென்ட் வைத்த காரணத்தால் மேல் சிகிச்சைக்காக சென்னை அப்போலா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறோம்" என்று குறிப்பிட்டனர்.

SCROLL FOR NEXT