தமிழகம்

பட்டா கணினிமயமாக்கப்பட்டதில் பெயர், நிலத்தின் அளவு உள்ளிட்ட விவரங்களில் குழப்பம்: ஆவணங்களுடன் அலைக்கழிக்கப்படும் பொதுமக்கள்

செய்திப்பிரிவு

வருவாய்த் துறையில் பட்டா கணினிமயமாக்கப்பட்டபோது, உரிமையாளர் பெயர், நிலத்தின் அளவு உள்ளிட்ட பல்வேறு விவரங்களை பதிவேற்றம் செய்ததில் ஏற்பட்ட குழப்பத்தால், பொதுமக்கள் ஆவணங்களுடன் அலைக்கழிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு நிர்வாகத்தில் காகிதமில்லா நிலையை உருவாக்கவும், ஆவணங்கள் தேடல் உள்ளிட்டவற்றுக்கான காலதாமதம் மற்றும் முறைகேடுகளை தவிர்க்கவும் பெரும்பாலான துறைகளின் செயல்பாடுகள் கணினிமயமாக்கப்பட்டு வருகின்றன. இதில், வருவாய்த் துறையின் கீழ் உள்ள நில நிர்வாகத் துறை, அளவைத் துறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பராமரிக்கப்படும் ஆவணங்கள் கடந்த 1992-ம் ஆண்டு முதலே கணினிமயமாக்கப்பட்டு வருகின்றன.

இதுதவிர, சமீபத்தில் பத்திரப் பதிவுத் துறையும் கணினிமயமாக்கப்பட்டுள்ளது. இதனால், நிலத்தின் விற்பனையின்போதே இணையதளம் வழி பட்டா மாற்றமும் செய்து தரப்பட்டு வருகிறது. அதே நேரம், கணினிமயமாக்கப்பட்ட பட்டாவில் உள்ள குழப்பத்தால், நில விற்பனை, நில உரிமை மாற்றம் போன்றவற்றில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆவணங்களை எடுத்துக் கொண்டு பொதுமக்கள் தாலுகா அலுவலகங்களுக்கு அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, பட்டா விவரங்களை கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் அவுட்சோர்ஸிங் முறையில், கணினி இயக்குபவர்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்போது, உரிமையாளர் பெயர், தந்தை பெயர், நிலத்தின் நான்கு எல்லைகள், நிலத்தின் அளவு உள்ளிட்ட விவரங்களை பதிவேற்றம் செய்தவர்கள் செய்த தவறு, தற்போது மிகப்பெரிய சிக்கலை வருவாய்த் துறையில் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், 60 சதவீத பட்டா விவரங்களில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கையால் எழுதித் தரப்பட்டபட்டாவில் விவரங்கள் சரியாக இருக்கும்நிலையில், கணினி வழி பட்டாவில் விவரங்கள் தவறாக இருப்பதால் பொதுமக்கள் செய்வது அறியாது தவித்துவருகின்றனர்.

தமிழகம் முழுவதும் தவறுகள்

இதுகுறித்து வருவாய்த் துறை அலுவலர்கள் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் இதுபோன்ற தவறுகள் கண்டறியப்பட்டுள்ளன. கணினியில் விவரங்களை வருவாய்த் துறை அலுவலர்களை வைத்து பதிவேற்றம் செய்திருக்கவேண்டும். அல்லது அலுவலர் உடன் இருந்திருக்க வேண்டும். அப்போதுதான், தந்தை, மகன், நிலத்தின் அளவு முறைகள் உள்ளிட்டவற்றை சரியாக செய்ய முடியும்.

ஆனால், வெளி ஆட்களை வைத்து செய்ததால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு ஏற்படும் குழப்பங்களை சரிசெய்வதற்கான அதிகாரம் தற்போதுவருவாய் கோட்டாட்சியரிடம் (ஆர்டிஓ)வழங்கப்பட்டுள்ளது. அவர் சம்பந்தப்பட்டவரிடம் இருந்து கோரிக்கை மனுவை பெற்று, விசாரணை நடத்த தாசில்தாருக்கு உத்தரவிடுவார். அவர் வருவாய் அலுவலர், கிராம நிர்வாக அலுவலரிடம் கள ஆய்வு மூலம் பெறும் விவரங்களை அறிக்கையாக தயாரித்து, ஆர்டிஓவிடம் வழங்குவார். அதன்பிறகு ஆர்டிஓ உத்தரவு பிறப்பிப்பார்.

4 வட்டங்களை கவனிக்கும் ஆர்டிஓக்களுக்கு பல்வேறு பணிகள் இருப்பதால், உத்தரவு பிறப்பிப்பதில் தாமதம் ஏற்படும். எனவே, இவ்வாறு கணினியில் பெயர், விவரங்களை மாற்றம் செய்வதற்கான அதிகாரத்தை வட்டாட்சியரிடம் வழங்கலாம். அவ்வாறு செய்தால், கால விரயம் எற்படாது. பணிகளும் சுலபமாக இருக்கும். மேலும், கிராம நிர்வாக அலுவலரிடம் விவரங்கள் சரியாக இருக்கும் என்பதால் தவறுகளும் எளிதாக சரிசெய்யப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தேவையற்ற பண விரயம்

மேலும், தற்போது ஆர்டிஓக்களிடம் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதால், சிலநேரங்களில் பொதுமக்களுக்கு தேவை இல்லாத பண விரயம் ஏற்பட்டு வருகிறது.

அதாவது, கையால் எழுதிக் கொடுக்கப்பட்டுள்ள பட்டாவில் உள்ள பெயர்,கணினியில் மாறியுள்ளதால், சம்பந்தப்பட்ட நில உரிமையாளர் டிஆர்ஓவிடம் புகார் அளித்தால், பெயரை மாற்ற சம்பந்தப்பட்ட நிலத்தின் அசல் ஆவணங்களை சரிபார்ப்பதுடன், வட்டாட்சியர் வழியாக,கிராம நிர்வாக அலுவலரிடம் கள ஆய்வு, விசாரணை நடத்த அறிவறுத்துவது வழக்கமான நடைமுறையாக உள்ளது. ஆனால், சில டிஆர்ஓக்கள் அதைவிடுத்து, ‘நிலத்தை அளக்க வேண்டும். அதற்காக கட்டணம் செலுத்த வேண்டும்’ என்று கூறுவதாக புகார் எழுந்துள்ளது.

நிலத்தை அளக்க அவசியம் இல்லை

இதுகுறித்து வருவாய்த் துறை அலுவலர்கள் கூறும்போது, ‘‘நில அளவில் மாற்றம் இருந்தால் மட்டுமே அதை அளக்க உத்தரவிட வேண்டும். ஆனால், பெயர் மாற்றத்துக்கு, ஆவணங்களை சரிபார்த்தல், விசாரணை நடத்துதல் மூலமாகவே முடித்துவிட முடியும். பெயர் மாற்றத்துக்கு நிலத்தை அளக்க உத்தரவிட வேண்டிய அவசியம் இல்லை. பெயர் மாற்றம் தொடர்பாக அந்தந்த வட்டத்தின் வட்டாட்சியர்களே விசாரித்து மாற்றும் வகையில் நடைமுறையை மாற்றினால், பொதுமக்கள் அலைக்கழிக்கப்பட மாட்டார்கள்’’ என்றனர்.

இதற்கிடையில், இந்த குழப்பங்களை சீரமைப்பது தொடர்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்களுடன் நில நிர்வாக ஆணையரகம் சமீபத்தில் ஆலோசனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT