கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையை முன்னிட்டு திருவள்ளூரில் பெண்கள் பங்கேற்ற பால்குட ஊர்வலம் நேற்று நடைபெற்றது.
திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான, பங்களா தோட்டத்தில் அமைந்துள்ள அரசமரத்து கிருஷ்ணருக்கு ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படும்.
தற்போது, கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக விழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், வழக்கமான உறியடி, வழுக்கு மரம் ஏறுதல் உள்ளிட்ட நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டன. எளிமையான முறையில் கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, திருவள்ளூரைச் சேர்ந்த பெண்கள் பால்குடம் சுமந்து ஊர்வலமாக பங்களா தோட்டத்துக்கு வந்து, கிருஷ்ணருக்கு பால் அபிஷேகம் செய்து, வழிபட்டனர். மேலும், பால், வெண்ணெய், நெய், தயிர், முறுக்கு, சீடை, பழங்களை உள்ளிட்டவற்றை கிருஷ்ணருக்கு சமர்ப்பித்து, வழிபாடு நடத்தினர். இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் எளிமையான முறையில் கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையைக் கொண்டாடினர்.