சென்னை மாநகர எல்லைக்கு உட்பட்ட 4 சுங்கச்சாவடிகளில் கட்டண வசூல் நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை பெருநகர எல்லைக்குள் ராஜீவ் காந்தி சாலையில் உள்ள பெருங்குடி, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூரில் மேடவாக்கம் சாலை, கருணாநிதி சாலை சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
திமுக ஆட்சி பொறுப்பில் வந்த பிறகு, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று பார்வையிட்டு, இந்த சுங்கச்சாவடிகள் நீக்குவது தொடர்பாக அறிக்கையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.
இதற்கிடையே, ‘தற்போது ஓம்.எம்.ஆர். சாலையில் மெட்ரோ பணிகள் நடைபெற உள்ளதால், பெருங்குடி, துரைப்பாக்கம், மேடவாக்கம், அக்கறை பகுதிகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் இனி கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது’ என பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ. வேலு சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் அறிவித்தார். இதற்கான அரசு ஆணையும் பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து அரசின் உத்தரவுப்படி நேற்று காலை முதல் இந்த 4 சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூல் செய்வது நிறுத்தப்பட்டது. இதற்கு, இந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். வாகன ஓட்டிகள் சிலர் அந்த சுங்கச்சாவடிகளில் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.