புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் மூன்றாம் நாள் கூட்டம் நேற்று நடந்தது. அவையில் சுயேட்சை எம்எல்ஏ சிவா பேசுகையி்ல், "சட்டமன்ற உறுப்பினர்கள் பேசும் குறிப்புகளை, குறிப்பு எடுக்கும் அரசுத் துறை செயலர் மற்றும் இயக்குநர்கள் சரியாக சட்டப்பேரவைக்கு வருவதில்லை. சட்டப்பேரவை முடியும் வரை சட்டப்பேரவை அலுவல்களை குறிப்பெடுக்க வருமாறு அழைப்பு விடுக்க வேண்டும்" என சட்டப் பேரவைத் தலைவரிடம் கோரிக்கை வைத்தார். அதே கோரிக்கை தொடர்பாக சட்டப்பேரவை துணைத்தலைவர் ராஜவேலுவும் குறிப்பிட்டார்.
இதையடுத்து பேரவையில் சட்டப்பேரவைத்தலைவர் செல்வம், "அரசு செயலர்கள், இயக்குநர்கள் பேரவைக்கு உடனே வரவேண்டும்.
சட்டப்பேரவை நடைபெறும் நாட்களில் அவர்கள் அனைவரும் பேரவையில் இருக்க வேண்டும்" என்று உத்தரவிட்டார். அதையடுத்து அரசு செயலர்கள், இயக்குநர்கள் பலரும் பேரவைக்கு வந்தனர்.
இதனைத்தொடர்ந்து சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் தலைமையில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும்சட்டப்பேரவை செயலர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து சட்டப் பேரவைத் தலைவர் செல்வம் கூறும்போது. " தலை மைச் செயலர் தலைமையில் அனைத்துத்துறை செயலர்களும் மற்றும் இயக்குநர்களும் சட்டப்பேரவை முடியும் வரை காலை ஒன்பது முப்பது மணிக்கு முன் வர வேண்டும். அவ்வாறு வராதவர்கள் மீது தலைமை செயலரிடம் தெரிவித்து பின்பு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டார்.