மதுரை - புது நத்தம் சாலை பறக்கும் பாலத்தின் கர்டர் இடிந்து விழுந்தது எப்படி என்பது குறித்த தகவல் வெளி யாகி உள்ளது.
மதுரை - புது நத்தம் சாலையில் ரூ.544 கோடி மதிப்பில் 7.3 கி.மீ. நீள பறக்கும் பால கட்டுமானப் பணியின்போது, கடந்த சனிக்கிழமை நாராயணபுரம் பகுதியில் இணைப்பு பாலத்துக்கான கான்கிரீட் கர்டர் இடிந்து விழுந்ததில் உத்தரப்பிரதேச மாநிலத் தொழிலாளி ஆகாஷ்சிங் உயிரிழந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் அமைச் சர்கள், அதிகாரிகள் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு என்ஐடி தொழில்நுட்பக் குழுவினர் ஆய்வுக்கு உத்தரவிட்டனர்.
இதுவரை நடந்த விசாரணையில் இணைப்பு பாலத்துக்கான 2 தூண்களை இணைக்கும் பணி நடந்தபோது, ஹைட்ராலிக் கிரேன் இயந்திரம் பழுதானதாலேயே 160 டன் எடை கொண்ட கான்கிரீட் கர்டர் கீழே விழுந்துள்ளது. மேலும் எடை குறைவான ஹைட்ராலிக் கிரேன் பயன்படுத்தப்பட்டதும், பொறியாளர் கள் மேற்பார்வையில் இப்பணியை மேற்கொள்ளாததுமே விபத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
இதுபோன்ற விபத்துகளுக்கு பிறகே கட்டுமானப் பணியின் தரம் குறித்து பேசப்படுகிறது. ஆனால், பிரம்மாண்ட பணிகளை மக்கள் பிரதிநிதிகள், உயர் அதிகாரிகள் கண்காணிக்க ஆர்வம் காட்டாததும், அரசியல் பின்னணியோடு ஒப்பந்ததாரர்கள் டெண்டர் எடுப்பதால், அவர்கள் செய்யும் தவறுகளை மாவட்ட உயர் அதிகாரிகளால் கண் டிக்கவும் முடியவில்லை. இந்த விபத்தால், ஒட்டு மொத்த பால கட்டுமானத்தின் மீதே மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து மாநில, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: மாநில அரசில் இதுபோன்ற பணிகளை அரசு பொறி யாளர்கள் கண்காணிப்பர்.
ஆனால், மத்திய அரசின் ஏஜென்சி நிறுவனமான தேசிய நெடுஞ் சாலைத்துறை ஆணையம் சார்பில் நடக்கும் பால கட்டுமானப் பணிகளை திட்ட இயக்குநர் மேற்பார்வையில் கன்சல்டன்ட் பொறியாளர் குழுவே கண்காணிக்கும்.
புது நத்தம் பாலப்பணியில் விபத்து நடந்தபோது கண்டிப்பாக கன்சல்டன்ட் பொறியாளர்கள் இருந்திருப்பர். ஆனால், கட்டுமான நிறுவனத்தினர் இயந்திரங்கள், மற்ற பொருட்களை வாடகைக்கு எடுக்கும் பணியை நிறைய சப்-கான்ட்ராக்டர்களுக்கு ஒப்பந்தம் விட்டிருப்பர்.
அப்படி இயந்திரங்களை எடுத்த போது, சில தவறுகள் நடந்திருக் கலாம். இதை அங்கு பணியில் இருந்த பொறியாளர்கள் கண்காணிக்காமல் விட்டதாலேயே விபத்து நடந்திருக்க வாய்ப்புள்ளது.
தரம் குறைய வாய்ப்பில்லை
பறக்கும் பால கட்டுமானப்பணியின் தரம் குறைய வாய்ப்பில்லை. ஏனெனில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் மேற்கொள்ளும் சாலை, மேம்பாலத் திட்டத்துக்கான மொத்த தொகையையும், சுங்கக் கட்டணமாக வாகன ஓட்டுநர்களிடம் வசூலிக்கும்.
அதனால் நீண்ட காலத்துக்கு உழைக்கும் வகையில் கட்டுமானப் பணி தரமாகத்தான் நடக்கும். அத னால் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என்றனர்.