வெள்ளகோவில் அருகே கரும்பு வெட்டும் ஒப்பந்ததாரர் கடத்தப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் ஒரே வாரத்தில் நிகழ்ந்த 3-வது கடத்தல் சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் பேராட்டத்தைச் சேர்ந்தவர் ரவி (50). கரும்பும் வெட்டும் ஒப்பந்ததாரர். இவர் திருப்பூர் மாவட்டம் வெள்ளியங்காடு வலசு பகுதியில் வயலில் கரும்பை வெட்டுவதற்கு ஒப்பந்தம் எடுத்திருந்தார். இதையடுத்துத் தொழிலாளர்களை அழைத்து வந்த ரவி, அப்பகுதியிலேயே தங்கியிருந்து கரும்புகளை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். நேற்று இரவு பணியை முடித்து, தொழிலாளர்களுக்கு ஊதியத்தைக் கொடுத்துவிட்டுப் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது காரில் வந்த ஒரு கும்பல், ரவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது. அப்போது திடீரென ரவியைத் தூக்கி காரில் கடத்திக்கொண்டு அங்கிருந்து சென்றது. இதனால் அவரிடம் பணி செய்த தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக வெள்ளகோவில் போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீஸார், சம்பவ இடத்தை ஆய்வு செய்து 6 தனிப்படைகள் அமைத்துத் தேடுதலைத் தொடங்கினர்.
பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக இந்தக் கடத்தல் நடந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். அவர்கள் வந்த வாகனத்தைக் கொண்டு அப்பகுதியில் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் தனிப்படை போலீஸார் சேலம், விழுப்புரம் உள்ளிட்ட பகுதியில் முகாமிட்டுத் தேடி வருவதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோலப் பல்லடம் அருகே தங்க பிஸ்கட் கடத்தல் விவகாரத்தில் கார் ஓட்டுநர் சக்தி (எ) மகேஸ்வரன் (26) கடத்தப்பட்டார். இந்நிலையில் தற்போது வெள்ளகோவில் அருகே கரும்பு வெட்டும் ஒப்பந்ததாரர் கடத்தப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் ஒரே வாரத்தில் நிகழ்ந்த 3-வது கடத்தல் சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.