தமிழகம்

பாரா ஒலிம்பிக்ஸ்; இந்தியா ஒரே நாளில் 4 பதக்கங்கள் வென்று சாதனை: ராமதாஸ் வாழ்த்து

செய்திப்பிரிவு

பாரா ஒலிம்பிக்கில் பதக்கங்களை வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக்ஸ் போட்டி நடைபெறுகிறது. இதில் இந்தியா பதக்க வேட்டையை நடத்தி வருகிறது. இதுவரை ஒரு தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.

பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டிகளின் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை அவனி லெகாரா, வட்டு எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீரர் யோகேஷ் கதுனியா, ஈட்டி எறிதலில் வெள்ளி, வெண்கலம் வென்ற தேவேந்திர ஜஜாரியா, சுந்தர்சிங்குக்கு வாழ்த்துகள்.

பாரா ஒலிம்பிக் போட்டிகளில் ஒரே நாளில் இந்தியா 4 பதக்கங்களை வென்றது இதுவே முதல் முறை; இந்தியா அதிக பதக்கங்களை வென்றிருப்பதும் இந்தப் போட்டியில்தான். இந்தியா பெருமை கொள்வதற்குக் காரணமான சாதனையாளர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்” என்று பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT