தமிழகம்

வேலை செய்யுமிடத்தில் பாலியல் சீண்டல்; 3 ஆண்டுகளில் 42 பெண்கள் புகார்: தனியாரில் பணிபுரிவோர் தயக்கம்

செய்திப்பிரிவு

வேலை செய்யும் இடங்க ளில் பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு ஆளானால் அதற்கு காரண மானவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பெண்களின் பாதுகாப்புக்கு உதவ கடந்த 2018-ல் மாவட்ட உள்ளூர் புகார் குழு உருவானது. பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும் பெண்கள் புகார் அளித்தால் இக்குழு விசாரணை நடத்தும். குற்றச்சாட்டு நிரூபணமானால் விதிக்கப்பட வேண்டிய தண்ட னையை ஆட்சியருக்கு இக்குழு பரிந்துரைக்கிறது. இக்குழுவுக்கு தலைவராக வித்யா ராம்குமாரும் உறுப்பினர்களாக 5 பேரும் இடம் பெற்றுள்ளனர்.

இதுதொடர்பாக உள்ளூர் புகார் குழுவிடம் விசாரித்தபோது, “உள்ளூர் புகார் குழு அமைந்து மூன்றாண்டுகள் ஆகிவிட்டது. இக்காலத்தில் நேரடியாக 42 புகார்கள் பெறப்பட்டன. குறிப்பாக பாலியல் விமர்சனங்கள், ஆபாச படங்களை காட்டுவது, பாலியல் சைகைகள், தொடுதல்கள் என பல வகைகளில் புகார்கள் இடம்பெற்றன. அதேபோல் பெண்க ளுக்கு வேலையில் பிரச்சினை ஏற்படுத்தி அச்சுறுத்துவது, வேலையில் தேவையின்றி குறுக் கீடு செய்வது, தேவையின்றி சகஊழியர் முன்னிலையில் அவமா னப்படுத்துவது போன்றவையும் பாலியல் துன்புறுத்தல்கள் தான்.

இப்பிரச்சினைகள் எழுந்தால் புகைப்படம், வீடியோ, சிசிடிவி காட்சி, எஸ்எம்எஸ், வாட்ஸ்அப் குறுந்தகவல் உள்ளிட்ட ஆணவங் களுடன் புகார் தரலாம். சக ஊழியர்களை சாட்சியாக சேர்க்கலாம். குறிப்பாக அரசுப் பணியில் இருக்கும் பெண்கள் தான் அதிகளவில் புகார் அளித்துள்ளனர். பணிப் பாதுகாப்பு இன்மையால் தனியார் நிறுவனங்களில் இருக்கும் பெண்கள் புகார் தராமல் தவிர்ப்பது தவறானது. பாலியல் ரீதியான பிரச்சினை ஏற்பட்டால் உடனே ஆவணங்களுடன் புகார் தரலாம். தவறிழைத்தோர் தண்டனை பெறுவது அவசியம். தயக்கமின்றி ஆட்சியரிடமும் புகார் தரலாம்” என்று குறிப்பிடுகின்றனர்.

ஆட்சியர் அலுவலக தரப்பில் விசாரித்தபோது, “உள்ளூர் புகார் குழுவின் மூலம் அரசுப் பணியில் இருப்போரிடம்தான் அதிக புகார்கள் வந்தன. விசாரணை நடத்திகுழுவினர் பரிந்துரை தந்திருப்பார் கள். முக்கியமாக சம்பந்தப்பட்ட நபருக்கு முதலில் எச்சரிக்கை விடப்படும். அதையடுத்து பதவி உயர்வு ரத்து, ஊதிய உயர்வு ரத்து, கட்டாய ஓய்வு தருவது போன்ற ஏதேனும் ஒரு தண்டனை பரிந்துரைப்படி முடிவு எடுக்கப்படும். பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அதிகாரிக்கோ, பணியாளருக்கோ கண்டிப்பாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்று குறிப்பிட்டனர்.

SCROLL FOR NEXT