கொடைக்கானலில் 4 மாதங் களுக்குப் பிறகு வார விடுமுறையான நேற்று ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்தனர்.
கொடைக்கானலில் நேற்று காலை முதலே பலத்த காற்றுடன் குளிர் நிலவியது. வெள்ளி நீர்வீழ்ச்சி, பிரையண்ட் பூங்கா, கோக்கர்ஸ்வாக் உள்ளிட்ட சுற்றுலா இடங்களை பயணிகள் கண்டு ரசித்தனர்.
சுற்றுலாத்தலங்கள் திறக்கப் பட்ட நிலையில் நீண்ட இடை வெளிக்குப்பிறகு விடுதிகள் நிரம்பின. ஆனால், விடுதிகளில் கட்டண உயர்வு சுற்றுலாப் பயணிகளை அதிருப்தி அடையச் செய்தது. மேலும் பல இடங்களில் வாகனங்கள் அணிவகுத்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கொடைக்கானலில் நேற்று பகலில் அதிகபட்சமாக 18 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியதால் குளிர் காணப்பட்டது. அவ்வப்போது சாரல் மழை பெய்தது. காற்றில் 79 சதவீதம் ஈரப்பதம் காணப்பட்டது. 6 கி.மீ. வேகத்தில் குளிர்ந்த காற்று வீசியது. இரவில் வெப்பநிலை 12 டிகிரி செல்சியஸாகக் குறைந்தது.