தமிழகம்

15 வழிகாட்டு நெறிமுறைகள்: தொகுதி வாரியாக தேர்தல் அறிக்கை - ராமதாஸ் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

வாக்கு சேகரிக்க செல்லும்போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து பாமகவினருக்கு வழிகாட்டு நெறி முறைகளை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். தொகுதி வாரியாக தேர்தல் அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக பாமக தலைவர் ஜி.கே.மணி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக நிர்வாகிகளும் தொண்டர்களும் எவ்வாறு பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதை விளக்கும் வகையில் 15 அம்ச தேர்தல் வழிகாட்டு நெறிமுறைகளை கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தயாரித்து வெளியிட்டுள்ளார். இந்த வழிகாட்டு நெறிமுறைகள் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

அதன் விவரம்:

தொகுதியில் உள்ள ஒவ்வொரு வாக்காளரையும் சந்தித்து பாமகவின் கொள்கைகள், நோக்கங்கள், செயல்திட்டங்கள், வாக்குறுதிகளைக் கூறி வாக்கு கேட்க வேண்டும். பாமகவுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்பதை விளக்கும் துண்டறிக்கையை ஒவ்வொரு பெண் வாக்காளரிடமும் கொடுத்து விளக்க வேண்டும்.

வாக்கு கேட்க செல்லும்போது தேநீர் வாங்கித் தரும்படி வேட்பாளரை கேட்கக்கூடாது. மாறாக வேட்பாளருக்கு தொண்டர்கள் தேநீர் வாங்கித் தரவேண்டும். பிரச்சாரத்துக்கான செலவுகளை அவர்களே பார்த்துக்கொள்ள வேண்டும். வேட்பாளர் சொந்த வாகனம் வைத்திருந்தால் அதில் சென்று வாக்காளர் களை சந்திக்கலாம். வேட்பாளரிடம் வாகனம் இல்லை என்றால் வாகனம் வைத்திருக்கும் நிர்வாகிகள், வேட்பாளரின் பிரச்சாரத்துக்காக வாகனம் அளித்து உதவ வேண்டும்.

விலை மதிப்பற்ற வாக்குரிமையை விலை கொடுத்து வாங்கும் திமுக, அதிமுகவின் கலாச்சாரத்தை பிரச்சாரத்தின் மூலம் இந்த தேர்தலுடன் முடிவுக்கு கொண்டுவர வேண்டும். உரிமையாளர்களிடம் முறைப்படி அனுமதி பெற்றுதான் சுவர் விளம்பரங்கள் எழுத வேண்டும். பொதுக்கூட்டங்கள், பிரச்சாரங்கள் நடந்த இடங்களில் சேரும் குப்பைகளை கட்சியினரே அப்புறப்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு தொகுதியிலும் நிலவும் பிரச்சினைகளைக் கண்டறிந்து, அவற்றை தீர்ப்பதற்கான செயல்திட்டங்களுடன் தொகுதி நிலையிலான தேர்தல் அறிக்கைகள் ஒவ்வொரு தொகுதியிலும் வெளியிட வேண்டும். தேர்தல் பிரச்சாரம் யாருக்கும் தொல்லை தராத வகையில் ஒழுங்கமைக்கப்பட வேண்டும். ஏதேனும் ஓர் இடத்தில் மற்ற கட்சியினர் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தால் அது முடிவடையும் வரை காத்திருத்து அதன்பின்னர் வாக்கு சேகரிப்பைத் தொடங்க வேண்டும். எதிர்க்கட்சியினரிடம் மிகவும் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும். தேர்தல் பிரச்சாரத்தின்போது மிகவும் நாகரிகமான முறையில் நடந்துகொள்ள வேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சிக்கக் கூடாது. இவ்வாறு வழிகாட்டு முறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT