ஆதரவற்ற, கணவனை இழந்த, கைவிடப்பட்ட பெண்கள் 30,800 பேருக்கு தலா 5 செம்மறி அல்லது வெள்ளாடுகள் இலவசமாக ரூ.75.63 கோடியில் வழங்கப்படும் என்று கால்நடைத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவித் துள்ளார்.
சட்டப்பேரவையில் கால்நடைத் துறை மானிய கோரிக்கை விவாத முடிவில், அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிவிப்புகள்:
கால்நடைகளின் நலன்களை பேணவும் தரமான சிகிச்சை வழங்கவும் ரூ.7.76 கோடி ஒதுக்கீட்டில் 7,760 கால்நடை சுகாதார முகாம்கள் நடத்தப்படும். தொலைதூர கிராமங்களில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு முதலுதவி, செயற்கை முறை கருவூட்டல், தடுப்பூசி, குடற்புழு நீக்கம் ஆகிய சேவைகளை வழங்க ரூ.2 கோடி மதிப்பில் 50புதிய கால்நடை கிளை நிலையங்கள் தோற்றுவிக்கப்படும்.
சிறந்த கால்நடை வளர்ப்பு முறைகளை அறிய ரூ.3.50 கோடியில் 25 கிளை நிலையங்கள், கால்நடைமருந்தகங்களாக தரம் உயர்த்தப்படும். ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த, கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற 30,800 பெண்களுக்கு ரூ.75.63 கோடி ஒதுக்கீட்டில் தலா 5 செம்மறி, வெள் ளாடுகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.
தமிழகத்தில் உள்ள 85 கால்நடை மருத்துவ நிலையங்களுக்கு ரூ.54 கோடியில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும். அரியலூர், கன்னியாகுமரி, ராமநாதபுரத்தில் உள்ள கால்நடைநோய் புலனாய்வு பிரிவுகளுக்கு ரூ.3.46 கோடியில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும். மாநிலத்தில் பசுந்தீவன இருப்பை அதிகரிக்க ரூ.4.82 லட்சம் மதிப்பில் 16 தீவன வங்கிகள் நிறுவப்படும்.
திருநெல்வேலி மாவட்டம்,அபிகேசம்பட்டி கால்நடைப்பண்ணையில் ரூ.9.42 கோடியில் நாட்டுக் கோழி இனப்பெருக்க பண்ணை மற்றும் கோழிக்குஞ்சுப் பொரிப்பகம் நிறுவப்படும்.
பன்னோக்கு மருத்துவமனை
செல்லப்பிராணிகளுக்கான பன்னோக்கு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் சென்னை நந்தனத்தில் ரூ.7.99 கோடியில் நிறுவப்படும். தமிழக வடமேற்கு மண்டலங்களில் நிலையான கால்நடை உற்பத்திக்காக தீவன விதைஉற்பத்திப் பிரிவு ரூ.1.49 கோடியில்நிறுவப்படும். தருமபுரி, கிருஷ்ணகிரியை இருப்பிடமாக கொண்ட திருக்கச்சிருப்பு செம்மறி ஆட்டினத்துக்கான ஆராய்ச்சி நிலையம் ரூ.1.80 கோடியில் தருமபுரியில் 800 ஏக்கரில் அமைக்கப்படும்.
மாதவரம் கோழியின ஆராய்ச்சி நிலையத்தில் தமிழ்நாட்டின சிறுவிடை கோழியினத்தை பாதுகாப்பதற்கான வள மையம் ரூ.1.52 கோடியில் நிறுவப்படும். தஞ்சாவூர், ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் தமிழகத்தின் பட்டணம் செம்மறி ஆட்டின வள மையம் ரூ.1.97 கோடியில் நிறுவப்படும். கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் கருவிமயமாக்கல் மையத்தின் வளாக வசதிகள் ரூ.2.50 கோடியில் மேம்படுத்தப்படும்.
இவ்வாறு அமைச்சர் அறி வித்துள்ளார்.