தமிழகம்

இந்திய கடலோரக் காவல் படை ரோந்து கப்பல் ‘விக்ரஹா’ நாட்டுக்கு அர்ப்பணிப்பு: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்

செய்திப்பிரிவு

இந்திய கடலோரக் காவல் படையின் `விக்ரஹா' என்ற ரோந்துக் கப்பலை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்து பெருமிதம் தெரிவித்தார்.

கடலோரக் காவல் படைக்காக `எல் அண்ட் டி' நிறுவனத்திடம் இருந்து 7 ரோந்துக் கப்பல்கள் வாங்க கடந்த 2015-ல் பாதுகாப்புத் துறை ஒப்பந்தம் செய்தது. இதன்படி, ஏற்கெனவே 6 கப்பல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், 7-வது ரோந்துக் கப்பலான ‘ஐசிஜி விக்ரஹா’ கடலோரக் காவல் படையிடம் வழங்கப்பட்டுள்ளது. இதை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா சென்னை துறைமுகத்தில் நேற்று நடைபெற்றது. கடலோரக் காவல் படை இயக்குநர் ஜெனரல் கே.நடராஜன் தலைமையில் நடைபெற்ற விழாவில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் `விக்ரஹா' கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

பின்னர் அவர் பேசியதாவது: இந்தக் கப்பல் முற்றிலும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. கடலோரக் காவல் படையில் தற்போது 20 ஆயிரத்துக்கும் மேற் பட்ட வீரர்கள் உள்ளனர். மேலும், 150 ரோந்துக் கப்பல்கள், 65 விமானங்கள் உள்ளன.

இந்தப் படை உருவாக்கப்பட்ட 40 ஆண்டு களில், சர்வதேச தரத்துடன் செயல்பட்டு, கடல் பேராபத்துகளை தடுப்பதில் திறமையுடன் செயல்பட்டு வருகிறது. கடலோரக் காவல் படையின் வலிமை, திறமை தொடர்ந்து அதிகரித்து வருவதால் 2008 மும்பை தாக்குதலுக்குப் பிறகு, கடல் பகுதியில் இருந்து இதுவரை எவ்வித தாக்குதலும் வரவில்லை. இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், ராணுவ தளபதி எம்.எம்.நரவாணே, தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலர் வெ.இறையன்பு, கடலோர காவல் படை கிழக்கு பிராந்திய ஐ.ஜி. ஆனந்த் பிரகாஷ் படோலா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

2,200 டன் எடை

விக்ரஹா ரோந்துக் கப்பல் 98 மீட்டர் நீளம், 15 மீட்டர் அகலம் உடையது. எடை 2,200 டன். மணிக்கு 26 கடல் மைல் வேகத்தில் 5 ஆயிரம் கடல் மைல் தூரம் செல்லும் திறன் உடையது. இதில், ஒரு 40/60 போஃபர்ஸ் துப்பாக்கி, 12.7 மி.மீ. ரக துப்பாக்கிகள் மற்றும் இரட்டை இன்ஜின் பொருத்தப்பட்ட ஹெலிகாப்டர் தரையிறங்கும் வசதி, 4 அதிவிரைவுப் படகுகளை சுமந்து செல்லும் வசதி உள்ளது. இதுதவிர, நவீன தொலைத் தொடர்பு சாதனங்கள், வழிகாட்டும் கருவிகள், எண்ணெய் கசிவு போன்ற சுற்றுச்சூழல் மாசுக்களை தடுக்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. கமாண்டன்ட் அனூப் தலைமையில் இயங்கும் இந்த ரோந்துக் கப்பலில், 11 அதிகாரிகளும், 110 சிப்பந்திகளும் பணிபுரிவர்.

SCROLL FOR NEXT