தமிழகம்

இலங்கை அகதிகள் முகாமை இனிமேல் மறுவாழ்வு முகாம் என அழைக்க அரசாணை வெளியீடு: பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சட்டப்பேரவையில், திருவாரூர் திமுக உறுப்பினர் பூண்டி கலைவாணன் நேற்று பேசும்போது, ‘‘இலங்கை தமிழ் அகதிகள் முகாமில் அவர்களுக்கான அடிப்படைதேவைகள், கல்வி உள்ளிட்டவற்றுக்கான அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டுள்ளார்’’ என்றார்.

அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஸ்டாலின், ‘‘உறுப்பினர் பேசும்போது, இலங்கை தமிழ் அகதிகள் என்று குறிப்பிட்டார். இன்றுமுதல் ‘இலங்கை தமிழ் அகதிகள் முகாம்’ என்று கூறாமல், ‘மறுவாழ்வு முகாம்’ என்று கூற வேண்டும். அவர்கள் ஆதரவற்றவர்கள் அல்ல; அவர்களுக்கு துணையாக நாம் இருக்கிறோம். எனவே, அகதிகள் முகாம் என்று அழைக்காமல் ‘இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்’ என்று அழைக்க வேண்டும்என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது’’ என்றார்.

கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம், வேளாண்மைத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் கடலூர் தொகுதி திமுக உறுப்பினர் ஐயப்பன் பேசும்போது, முதல்வர் உள்ளிட்டவர்களை பாராட்டினார்.

முதல்வர் எச்சரிக்கை

அப்போது முதல்வர் ஸ்டாலின் குறுக்கிட்டு, “உறுப்பினர் கொடுக்கப்பட்டுள்ள நேரத்தை மனதில் வைத்துக்கொண்டு பேசவேண்டும். நேற்றுகூட புகழ்ந்து பேசுவதை ஓரளவு குறைவாக வைத்துக் கொள்ளுங்கள் என்றுகட்டளையாகவே கூறியிருக்கிறேன். இப்போது உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிஇருக்கும்.

அதனால் தயவுசெய்து விவாதத்துக்கு செல்லுங்கள். விரைவாகப் பேசி முடியுங்கள்” என்று கேட்டுக் கொண்டார்.

SCROLL FOR NEXT