தமிழகம்

தங்கம் வாங்க ‘பான் அட்டை’ கட்டாயம்: நகைக் கடை உரிமையாளர்கள் கடைகளை அடைத்து போராட்டம்

செய்திப்பிரிவு

ரூ.2 லட்சத்துக்கும் மேல் தங்கம் வாங்க ‘பான் அட்டை’ கட்டாயமாக்குவதை கண்டித்து நகை கடை உரிமையாளர்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

வாடிக்கையாளர்கள் ரூ.2 லட்சம் அல்லது அதற்கு அதிக தொகைக்கு நகைகள் வாங்கும்போது ‘பான் அட்டை’ கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என கடந்த ஜனவரி முதல் புதிய விதிமுறையை மத்திய அரசு நடைமுறைப் படுத்தியுள்ளது. இந்த திடீர் கட்டுப்பாடு காரணமாக நகை விற்பனை தொழில் 30 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதாக நகை கடை உரிமையாளர்கள் தெரி வித்துள்ளனர்.

இந்த புதியமுறை ரத்து செய்ய கோரி நேற்று முன்தினம் அகில இந்திய அளவில் நகை கடை உரிமையாளர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். ஆனால், தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் நேற்று முழு கடையடைப்பு போராட்டம் நடத்தினர். காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நகை கடைகள் மூடி இருந்தன. சென்னையில் தியாகராயநகர், புரசைவாக்கம், பிராட்வே, மயிலாப்பூர், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நகை கடைகள் மூடி இருந்தன.

வர்த்தகம் பாதிப்பு

இது தொடர்பாக சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுசெயலாளர் எஸ்.சாந்தகுமார் ‘தி இந்து’விடம் கூறுகையில், ‘‘தமிழகம், புதுச்சேரி யில் நடந்த கடையடைப்பு போராட்டத்தால் ரூ.260 கோடி முதல் ரூ.300 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 22.03 கோடி பேர் தான் பான் அட்டைகள் வைத் துள்ளனர். பெரும்பாலானோரிடம் இந்த அட்டைகள் இல்லாத நிலையே உள்ளது.

எனவே, நகை வாங்குவோர் பாதிக்காமல் இருக்கும் வகையில் பான் அட்டை பயன்பாட்டை வரும் பட்ஜெட்டில் மத்திய அரசு நீக்க வேண்டும். இந்த உத்தரவைக் கைவிடக்கோரி மத்திய நிதி அமைச்சர், நிதித்துறைச் செயலர் ஆகியோரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளோம். மத்திய அரசு விரைவில் தனது முடிவை கைவிடவில்லை எனில் எங்களது அடுத்த கட்டமாக போராட்டத்தை அறிவிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT