சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதி ஆவணித் திருவிழாவில் 8-வது நாளன்று வெள்ளைக் குதிரை வாகனத்தில் அய்யா கலிவேட்டைக்கு புறப்படும் வைபவம் நடைபெற்றது. 
தமிழகம்

சாமிதோப்பு தலைமைப்பதியில் ஆவணித் திருவிழா வெள்ளை குதிரை வாகனத்தில் அய்யா வைகுண்டர் கலிவேட்டை

செய்திப்பிரிவு

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதி ஆவணித் திருவிழாவில் வெள்ளை குதிரை வாகனத்தில் அய்யா கலிவேட்டை வைபவம் நடைபெற்றது.

இப்பதியில் 11 நாள் ஆவணித்திருவிழா கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் வாகன பவனி, உச்சிப்படிப்பு, உகப்படிப்பு ஆகியவை நடந்துவருகிறது. கரோனா கட்டுப்பாடுகளால் சமூக இடைவெளியுடன் குறைந்த அளவில் பக்தர்கள் விழாவில் பங்கேற்று வருகின்றனர்.

விழாவில் 8-ம் நாளான நேற்றுமுன்தினம் மாலையில் முக்கிய நிகழ்வான அய்யா கலி வேட்டையாடும் வைபவம் நடைபெற்றது. வெள்ளைக் குதிரை வாகனத்தில் அய்யாவைகுண்டர் வீற்றிருக்க கலிவேட்டைக்கு வாகனம் புறப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பாலஜனாதிபதி தலைமை வகித்தார். ராஜவேல் லோகாதிபதி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். தலைமைப்பதியின் முன்பிருந்து புறப்பட்ட வாகனம் இரவில் முத்திரி கிணற்றங்கரையை அடைந்தது. அங்கு அய்யா வைகுண்டர் கலிவேட்டையாடும் வைபவம் நடைபெற்றது.

பின்னர் அங்கிருந்து அய்யாவின் குதிரை வாகனம் வடக்கு ரதவீதிக்கு சென்று தலைமைப்பதியின் வடக்கு வாசலை அடைந்தது. அங்கு பக்தர்களுக்கு அய்யா வைகுண்டர் தவக்கால காட்சியருளினார். வருகிற 30-ம் தேதி விழா நிறை வடைகிறது.

SCROLL FOR NEXT