காளான் வளர்ப்பில் 100 மகளிருக்கு ஒரு கோடி ரூபாய் மானியமாக வழங்கப்படும் என்றும் தரிசு நில சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு சான்றிதழுடன் ரொக்கப் பரிசும் வழங்கப்படும் என்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அறிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் ஒவ்வொரு துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று (ஆக.28) வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
இதில் வேளாண் துறை சார்பில் வெளியான அறிவிப்பு:
''அதிகரித்து வரும் காளான் தேவையைப் பூர்த்தி செய்திடவும், பெண் விவசாயிகள் காளான் வளர்ப்பில் ஈடுபட்டு அதிக அளவில் லாபம் ஈட்டவும், தினசரி வருமானம் பெற்றிடவும் ஏதுவாக 2021-202ஆம் ஆண்டில் 100 பெண் விவசாயிகளுக்கு, ஒருவருக்கு ஒரு லட்சம் ரூபாய் என்ற வீதத்தில், குடிசைத் தொழிலாகக் குறைந்த பரப்பிலான காளான் உற்பத்திக்கூடம் அமைத்திட மானியம் வழங்க மகளிர் திட்டத்துடன் இணைந்து ஒரு கோடி ரூபாய் செலவிடப்படும்.
விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான பரிசு
தரிசு நிலங்களில் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், 2021-2022ஆம் ஆண்டில் மாவட்ட அளவில் சிறந்த விவசாயிகளைத் தேர்வு செய்து சான்றிதழுடன் முதலாம் பரிசாக ரூ.15,000-ம், இரண்டாம் பரிசாக ரூ.10,000-ம், மூன்றாம் பரிசாக ரூ.5,000-ம் வழங்கிட ஆண்டிற்கு ரூ.12 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்''.
இவ்வாறு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அறிவித்துள்ளது..