கோயில் யானைகளுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தியுள்ளார்.
கோயில்களின் மேம்பாடு, வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறையின் தலைமை அலுவலக கூட்டரங்கில் நடந்தது. அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடந்தஇக்கூட்டத்தில் துறை ஆணையர்ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையர்கள் இரா.கண்ணன்,ந.திருமகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது:
கோயில்களில் விரைவில் திருப்பணிகளை முடித்து, குடமுழுக்கு நடத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். அர்ச்சகர், ஓதுவார் பயிற்சிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரித்து, தனியார் பள்ளிகளுக்கு இணையாக தரம் உயர்த்தி பள்ளி வளாகத்தை தூய்மையாக வைக்க வேண்டும்.
ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ள ரூ.625 கோடி மதிப்பிலான கோயில் நிலங்களை, பாதுகாப்பான முறையில் பராமரித்து வருவாயைப் பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோயில் யானைகளுக்கு 30 நாட்களுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. இனிமேல், 15 நாட்களுக்கு ஒருமுறை பரிசோதனை செய்வதை கோயில் அலுவலர்கள் உறுதிசெய்யவேண்டும். விழாக் காலங்கள் தவிர,மற்ற நேரங்களில் யானைகளை இயற்கையான சூழ்நிலையில் வைத்து பராமரிக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.