தமிழகம்

உரிமை ஆவண ஒப்படைப்பு பதிவுக்காக தொழில் துறையினர் பதிவு அலுவலகத்துக்கு நேரில் வருவதில் இருந்து விலக்கு: பேரவையில் சட்டத் திருத்த மசோதா தாக்கல்

செய்திப்பிரிவு

தொழில் துறையினர் வங்கிக் கடன் பெறுவதற்கான உரிமை ஆவண ஒப்படைப்பு தொடர்பான பதிவுக்கு சார் பதிவாளர் அலுவலகத்துக்கு நேரில் வருவதில் இருந்து விலக்கு அளிக்க வகைசெய்யும் சட்டத் திருத்த மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றக் கட்டணங்கள், உரிமை வழக்குகள் மதிப்பீடு சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான திருத்தச் சட்ட மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டது.

உடன்படிக்கை ஆவணம்

தொழில் துறையினர் வங்கிக் கடன் பெறும்போது, உரிமை ஒப்படைப்பு ஆவணம் (எம்ஓடி) மேற்கொள்ளப்பட வேண்டும். சட்டப்படி இந்த ஆவணத்தை உடன்படிக்கை ஆவணமாக பதிவு செய்ய வேண்டும்.

இதற்காக பதிவுத் துறை அலுவலகத்துக்கு தொழில் துறையினர் செல்ல வேண்டி உள்ளது. இதுஅவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதாக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதையடுத்து, உடன்படிக்கை ஆவணத்தை பதிவு செய்வதற்காக தொழில் துறையினர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் பதிவுச் சட்டத்தை திருத்த முடிவெடுக்கப்பட்டது.

இதுதொடர்பான திருத்தச் சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் வணிக வரி, பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி நேற்று அறிமுகம் செய்தார்.

நீதிமன்றக் கட்டணம்

ஓய்வுபெற்ற நீதிபதி கே.சம்பத்தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரை அடிப்படையில், உயில் மெய்ப்பிப்பு சான்றுஅல்லது ஆட்சியுரிமை ஆவணத்துக்கான நீதிமன்றக் கட்டணத்தை திருத்தம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, வாரிசு உரிமை சான்றுக்கான கட்டணமானது, ரூ.25ஆயிரத்துக்கு உட்பட்டு, வாரிசு உரிமை சான்றில் குறிப்பிடப்பட்டுள்ள கடன்கள், கடனீடுகளின் மொத்த தொகை அல்லது மதிப்பின் மீது 3 சதவீதம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நீதிமன்றக் கட்டணங்கள், உரிமை வழக்குகள் மதிப்பீடு சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான திருத்தச் சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி நேற்று அறிமுகம் செய்தார்.

இந்த சட்ட முன்வடிவுகள், பேரவையின் இறுதி அலுவல் நாளில் ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என தெரிகிறது.

SCROLL FOR NEXT