தமிழகம்

கே.டி.ராகவனை கைது செய்யக் கோரி சென்னையில் காங்கிரஸ் கட்சி போராட்டம்

செய்திப்பிரிவு

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான தமிழக பாஜக முன்னாள் பொதுச்செயலாளர் கே.டி.ராகவனை கைது செய்யக் கோரி காங்கிரஸ் கட்சியினர் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக பாஜக பொதுச்செயலாளராக இருந்த கே.டி.ராகவன், அக்கட்சியைச் சேர்ந்த பெண்மணி ஒருவரிடம் வாட்ஸ்ஆப் வீடியோவில் தவறாகப் பேசுவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து அவர் கட்சிப் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் கே.டி.ராகவனை கைது செய்யக் கோரியும், பாஜகவில் உள்ள பெண் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்காத தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை பதவியிலிருந்து நீக்கக்கோரியும் தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் சுதா ராமகிருஷ்ணன் தலைமையில் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் நேற்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சிதலைவர் கு.செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, மாநில ஊடகப் பிரிவுத் தலைவர் ஆ.கோபண்ணா, மகளிர் காங்கிரஸ் மாநில துணைத் தலைவர்கள் சுசீலா கோபாலகிருஷ்ணன், மலர்க்கொடி, மாவட்டத் தலைவர்கள் தங்கம், உமா, மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவ.ராஜசேகரன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மகளிர் காங்கிரஸார் தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தை முற்றுகையிட புறப்பட்டனர். அப்போது போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT