தமிழகம்

மத்திய அரசிடம் இணக்கமாக இருந்து அதிக நிதி பெற்றிருக்கிறார்கள்; சிறப்பான பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார்கள்: புதுவை அதிமுக கிழக்கு மாநில செயலாளர் புகழாரம்

செய்திப்பிரிவு

புதுச்சேரி பட்ஜெட் குறித்து அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் கூறியிருப்பதாவது:

காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சி கடந்த ஐந்தாண்டு காலம் முழு பட்ஜெட் போடாமல் ஆண்டுதோறும் இடைக்கால பட்ஜெட்டை சமர்ப்பித்து மக்களை ஏமாற்றியது.

கடந்த ஐந்தாண்டு காலத்தில் நிதி ஆதாரத்தை பெருக்க எவ்வித நடவடிக்கை எடுக்காத நிலையில், தற்போது நிதி ஆதாரத்தை பெருக்குவதற்கு பல திட்டங்களை இந்த பட்ஜெட்டில் அறிவித்துள்ளது வரவேற்கதக்கது. ஏழை,நடுத்தர மக்கள், வியாபாரிகள் பயன்பெறும் அறிவிப்புகள், வர்த்தக நிறுவனங்கள், மீனவர்களுக்கான பல்வேறு சலுகைகள், விவசாயிகளுக்கு பல திட்ட அறிவிப்புகள், என அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனுள்ள பட்ஜெட் சமர்பிக்கப் பட்டுள்ளது.

கடந்த ஆட்சியில் மூடப்பட்ட ரேஷன் கடைகளை திறப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, உணவு பொருட்கள் குறைந்த விலையில் விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் எங்குமே இல்லாத அளவில்முதியோர், விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், மீனவர்கள்,மாற்று திறனாளிகள் ஆகியோருக்கு மாதாந்திர நிதியுதவி உயர்த்தப்பட்டுள்ளது.

கல்வித் துறையை செம்மைப்படுத்த எப்போதும் இல்லாத வகையில் இந்த பட்ஜெட்டில் ரூ. 742 கோடி, இலவச அரிசிக்காக சுமார் ரூ.197 கோடி ஒதுக்கீடு செய்து மாதந்தோறும் மக்களுக்கு இலவச அரிசி வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த காங்கிரஸ், திமுககூட்டணி ஆட்சியில் மூடப்பட்டகூட்டுறவு சர்க்கரை ஆலையைதிறப்பதற்கு ரூ.40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறைக்கு எப்போதும் இல்லாத வகையில் ரூ. 795 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சுற்றுலாவை மேம்படுத்த செயல்படுத்தக்கூடிய பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியில் இழுத்துமூடப்பட்ட பல பொதுத்துறை நிறுவனங்களுக்கும், கூட்டுறவு சங்கங்களுக்கும் மீண்டும் செயல்பட தன்னாட்சி, பொதுத்துறை, கூட்டுறவு நிறுவனங்களுக்கு சுமார் ரூ.1,243 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியால் சீரழிந்தவருவாய் இழப்பு உள்ள சூழ்நிலையில் மத்திய அரசுடன் இணக்கமாகஇருந்து, அதிகநிதியை பெற்று வந்தது பாராட்டுக்குரியது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்காத மக்களும், ‘நாம் ஏன் வாக்களிக்கவில்லை?’ என்று வருத்தப்படக்கூடிய அளவிற்கு, இந்த பட்ஜெட் சிறப்பாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT