தமிழகம்

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை மீரா மிதுன் மற்றொரு வழக்கில் கைது: காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுப்பு

செய்திப்பிரிவு

பட்டியலினப் பிரிவைச் சேர்ந்த இயக்குநர்கள், நடிகர்களை அவதூறாகப் பேசியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நடிகை மீரா மிதுன், தற்போது வேறொரு வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

‘மிஸ் தென் இந்தியா’, ‘மிஸ் தமிழ்நாடு’ போன்ற அழகி பட்டங்களை வென்றவர் நடிகை மீரா மிதுன். ‘8 தோட்டாக்கள்’, ‘தானா சேர்ந்த கூட்டம்’ உள்ளிட்டதிரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியின் ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பிரபலமானார்.

இந்நிலையில், பட்டியலினப் பிரிவைச் சேர்ந்த இயக்குநர்கள், நடிகர்களை தவறாக விமர்சித்து யூ-டியூப்பில் ஒரு வீடியோவை மீரா மிதுன் சமீபத்தில் வெளியிட்டார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு புகார் கொடுத்தார். இதையடுத்து, மீரா மிதுன் மீது 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, கேரளாவில் பதுங்கி இருந்த அவரை சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீஸார் கடந்த 14-ம் தேதி கைது செய்தனர். அவரது நண்பர் ஷாம் அபிஷேக்கையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

திரைப்படங்களில் நடிக்கநிறைய கால்ஷீட் கொடுத்துள்ளதால், ஜாமீன் வழங்குமாறு மீரா மிதுன் கேட்டிருந்தார். ஆனால் ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

நீதிமன்றத்தில் ஆஜர்

இந்நிலையில், மீரா மிதுன்தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகள் கூறிவருவதாக ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் மீரா மிதுனை சென்னை எம்கேபி நகர் போலீஸார் நேற்று மீண்டும் கைது செய்து, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

ஜோ மைக்கேல் பிரவீன் கொடுத்த புகாரின்பேரில், மீரா மிதுனை 2 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கவேண்டும் என்று நீதிமன்றத்தில் போலீஸார் மனு தாக்கல் செய்தனர். ஆனால், அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

SCROLL FOR NEXT