சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக பணியாற்றி வரும் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜிக்கு அடுத்தபடியாக 2-வது மூத்தநீதிபதியாக பணியாற்றி வரும் எம்.எம்.சுந்தரேஷை(59), உச்ச நீதி மன்ற நீதிபதியாக நியமிக்க, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜியம் குடியரசுத் தலைவருக்கு பரிந் துரை செய்திருந்தது.
குடியரசுத் தலைவர் ஒப்புதல்
இந்நிலையில் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். அதையடுத்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஈரோட்டில் கடந்த 1962 ஜூலை 21-ம் தேதி பிறந்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், கடந்த 2009-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவரது தந்தை முத்துசாமி மூத்தவழக்கறிஞர். தாயார் புவனேஸ்வரி. இவரது மனைவி சுபாவும்,மகன் முத்துச்சரணும் வழக்கறிஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மகன் தற்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி விட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகத் தொழில்புரிந்து வருகிறார். இவரது மகள்நித்திலா மருத்துவம் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி எம்.எம்.சுந்தரேஷூக்கு சக நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் சங்கநிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
உயர் நீதிமன்றத்தில், தலைமைநீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையில் இன்று மாலை பிரிவு உபசார விழா நடைபெறவுள்ளது.