கணவர் சக்தியுடன், உடுமலை கவுசல்யா. 
தமிழகம்

கணவரை பிரிவதாக முகநூலில் பதிவிட்டது ஏன்?- உடுமலை கவுசல்யா விளக்கம்

டி.ஜி.ரகுபதி

கருத்து வேறுபாடு காரணமாக கணவர் சக்தியை பிரிவதாக முகநூலில் பதிவிட்டிருந்தேன் என உடுமலை கவுசல்யா தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழநியைச் சேர்ந்தவர்கள் சின்னசாமி - அன்னலட்சுமி தம்பதி. இவர்களது மகள் கவுசல்யா. இவர், உடுமலையைச் சேர்ந்த பட்டியல் வகுப்பைச் சேர்ந்த சங்கரை காதலித்து, பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். 2015 மார்ச் மாதம், சங்கர் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை உள்ளிட்ட 6 பேருக்கு, திருப்பூர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. அவர்களது மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் கவுசல்யாவின் தந்தையை விடுவித்ததோடு, 5 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது.

இதன் பின்னர் கவுசல்யா, கோவை வெள்ளலூரைச் சேர்ந்த பறை இசைக் கலைஞர் சக்தியை 2018-ல் மறுமணம் செய்து கொண்டார். இதற்கிடையே, கருணை அடிப்படையில், அரசுப் பணி கிடைத்ததைத் தொடர்ந்து, கவுசல்யா குன்னூரில் தங்கி பணிபுரிந்து வருகிறார். திருமணத்துக்குப் பிறகு சக்தி மீது சில புகார்கள் எழுந்தன. அதை சில அமைப்புகள் பேசித் தீர்த்தன.

இந்நிலையில், கவுசல்யா தனது முகநூல் பக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், ‘‘நானும் சக்தியும் பிரிகிறோம். ஓராண்டாக மனதளவில் என்னை காயப்படுத்தியதால், இனி அவரோடு என்னால் வாழ இயலாது. விவாகரத்துக்கு திங்கள் விண்ணப்பிக்கிறேன்’ என பதிவிட்டு இருந்தார். இதைத் தொடர்ந்து, பதிவுசெய்த சிறிது நேரத்தில் கவுசல்யா தனது பதிவை அழித்துவிட்டார்.

இதுகுறித்து விசாரித்தபோது, தந்தை உயிர்இழந்த பின்னர் கடந்த ஓராண்டாக சக்தி கோவையில் வசித்து வருகிறார் என்றும், குன்னூரில்கவுசல்யா தங்கி பணியாற்றி வருகிறார் என்றும், இப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தம்பதியர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

தம்பதி கருத்து

இதுகுறித்து கவுசல்யாவிடம் கேட்டபோது, ‘‘எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனால் முகநூலில் பதிவிட்டேன். அந்த விவகாரம் சரியாகிவிட்டது. நாங்கள் உட்கார்ந்து பேசபோகிறோம்’’ என்றார். சக்தியிடம் கேட்டபோது, ‘‘எங்களுக்குள் எந்த சிக்கலும் இல்லை. நாங்கள் பேசிக் கொண்டுதான் உள்ளோம்’’ என்றார்.

SCROLL FOR NEXT