சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் சொந்தமான மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில், ரூ.86 லட்சம் செலவில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
இப்பள்ளியில் ஏற்கெனவே 649 மாணவ, மாணவியர் சேர்க்கப்பட்டிருந்தனர். தனியாரிடம் இருந்து கோயில் நிர்வாக கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு மாணவ,மாணவிகளின் சேர்க்கை 830 ஆக உயர்ந்துள்ளது. இப்பள்ளியில் விளையாட்டு மைதானம் அமைத்து அதற்கு தேவையான உபகரணங்கள் வாங்கிக் கொடுக்கப்படும். பள்ளி வளாகத்தைச் சுற்றி மதில்சுவர் அமைத்து அதில் ஆன்மிகம் தொடர்பான ஓவியங்கள் வரையப்படும்.
திருமண விழாக்களும், கடவுள் வழிபாடும் இன்றியமையாததுதான். இருப்பினும், பாதுகாப்பு நடைமுறைகள் அதைவிட முக்கியம். கரோனா மூன்றாவது அலை அச்சம் இருப்பதால், அந்த அபாய கட்டத்தைக் கடந்த பிறகு கோயில்களை திறப்பதற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என்றார்.
ஆய்வின் போது, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், தாயகம் கவி எம்எல்ஏ உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.