மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தில் தமிழகத்தில் இதுவரை 2 லட்சத்து 7 ஆயிரத்து 838 பேர் பயன் பெற்றுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கரோனா பெருந்தொற்று காரணமாக சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த நோயாளிகள் உரிய சிகிச்சை பெற முடியாமலும், மருந்துகள் உட்கொள்ளாமலும், இறுதி கட்டத்தில் மருத்துவமனைக்கு வருவது அதிகரித்து வருகிறது.
இதைத் தவிர்க்கும் வகையில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் தமிழக அரசு தொடங்கியது. இத்திட்டத்தில், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்க்கான மருந்துகளை வீடுகளுக்கே சென்று சுகாதாரத் துறை களப்பணியாளர்கள் வழங்கி வருகின்றனர். மேலும், பிசியோதெரபி, குழந்தைகளின் பிறவி குறைபாடுகளை கண்டறிதல் உள்ளிட்ட சேவைகளும் வழங்கப்படுகின்றன.
இத்திட்டத்தில் இதுவரையில் 2 லட்சத்து 7 ஆயிரத்து 838 பேர் பயனடைந்துள்ளனர். இதில் 93 ஆயிரத்து 100 ரத்த அழுத்த நோயாளிகள், 60 ஆயிரத்து 221 நீரிழிவு நோயாளிகள் பயனடைந்துள்ளனர்.
இந்த இரண்டு வகையான பிரச்சினையாலும் பாதிக்கப்பட்ட 41,290 பேரும் பயனடைந்துள்ளனர். அதிகபட்சமாக ராமநாதபுரத்தில் 14,007, கிருஷ்ணகிரியில் 13,213, சேலத்தில் 11,419, திருவண்ணாமலையில் 10,273, விருதுநகரில் 9,629, ராணிப்பேட்டையில் 9,292, புதுக்கோட்டையில் 8,580, சென்னையில் 8,098 பேர் பயனடைந்துள்ளனர் என தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.