அவிநாசி-அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றக் கோரி திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் சுமார் 2 ஆயிரம் பொதுமக்கள் நேற்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இக்கோரிக்கையை வலி யுறுத்தி அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே 14 பேர் 8-வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து அன்னூர், பெருமாநல்லூர், குன்னத்தூர், சேவூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் உண்ணாவிரதம் தொடங் கினர். இதையடுத்து, மேற்குறிப் பிட்ட பகுதிகளில் 40 பேர் என, மொத்தம் 54 பேர் தொடர் உண் ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவிநாசி, அன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் விலை யில்லா பொருட்களை ஒப்படைக்க, சுமார் 40-க்கும் மேற்பட்ட வாகனங் களில் திருப்பூர் ஆட்சியர் அலுவல கத்துக்கு வந்திறங்கினர். சமூக ஆர்வலர்கள், பெண்கள், பள்ளி, கல்லூரி செல்வோர் சுமார் 2 ஆயிரம் பேர் இதில் பங்கேற்றனர்.
இத்திட்டத்தை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வலி யுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கருப்பு பேட்ஜ் அணிந்து, கருப்புக் கொடியை கைகளில் ஏந்தி பங்கேற்றனர்.
பேச்சுவார்த்தை
ஆட்சியர் அலுவலக குறைதீர் நாள் கூட்டரங்கில் பகல் 2 மணிக்கு, ஆட்சியர் ஜெயந்தி, எஸ்.பி. சரோஜ்குமார் தாகூர், வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமி, சட்டம்- ஒழுங்கு துணை ஆணையர் திஷா மித்தல், கோட்டாட்சியர் ப.முருகேசன் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது, பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: எங்களது சந்ததிகள் வாழ குடிநீர் தேவைக்காக, இத்திட்டத்தை அரசு உடனடியாக பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும். குடிநீர் இல்லாதபோது, உரிமைகளை மட்டும் வைத்துக்கொண்டு என்ன செய்வது? ஆகவே குடும்ப அட்டை தொடங்கி விலையில்லா பொருட்கள் வரை அனைத்தையும் ஒப்படைக்கிறோம் என்றனர்.
ஆட்சியர் ஜெயந்தி பேசும் போது, ‘தலைமைச் செயலரிடம் பேசி, உரிய பதில் பெற்றுத் தரு கிறேன்’ என்றார். எனினும், ‘அரசு, இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப் பதை உறுதி செய்ய வேண்டும்’ எனவும், அதுவரை கூட்டரங்கில் மவுனமாக அமர்ந்திருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். சுமார் 4 மணி நேரம் காத்திருந்த பொதுமக்களிடம், ‘உங்களது கோரிக்கையை அறிக்கையாக அரசுக்கு அனுப்பியுள்ளோம்’ என்று வருவாய் அலுவலர் தெரிவித்தார். இதனால், அதிருப்தி அடைந்த பொதுமக்கள் கூட்டரங்கில் இருந்து கலைந்து சென்றனர்.