தமிழகம்

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட 2 காவல் உதவி ஆணையர்கள் மனு: அதிமுக கட்சி அலுவலகத்தில் விருப்பமனு தாக்கல்

செய்திப்பிரிவு

தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட காவல் உதவி ஆணையர்கள் 2 பேர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர்.

பீர் முகமது

சென்னை மதுவிலக்கு உதவி கமிஷனராக இருப்பவர் பீர் முகமது. இவர் கடந்த 3 ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்து திருவல்லிக்கேணி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட தனது விருப்ப மனுவை தாக்கல் செய்தார்.

இதுகுறித்து அவரிடம் கேட்ட போது, “அதிமுக உதயமானதில் இருந்தே அக்கட்சியில் எங்கள் குடும்பம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருக்கிறது. வருகிற மே மாதத்துடன் நான் ஓய்வு பெறுகிறேன். ஆனால் தேர்தலில் போட்டியிட வசதியாக விருப்ப ஓய்வு கேட்டு டிஜிபி மற்றும் ஆணையாளர் அலுவலகங்களுக்கு கடிதம் கொடுத்துவிட்டேன்” என்றார்.

கணேசன்

சேலம் சூரமங்கலம் காவல் உதவி ஆணையராக இருப்பவர் கணேசன். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முதல்வர் ஜெயலலிதாவுக்காக பிரசாரம் செய்தார். சென்னையில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர் களுக்கு உதவும் வகையில் தனது ஒரு மாத சம்பளத்தை முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பி வைத்தார்.

இந்நிலையில் அவர் நன்னிலம் தொகுதி, சேலம் தெற்கு தொகுதி களில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளார். மேலும் நன்னி லம் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிடவும் விருப்ப மனு கொடுத்துள்ளார்.

போட்டியிட தடையில்லை

போலீஸ் அதிகாரிகள் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது, “பணியில் இருக்கும் போலீஸார் தேர்தலில் போட்டியிட முடியாது. ஆனால் தற்போது விருப்பமனு கொடுத்துள்ள இருவரும் தங்களது பணியை ராஜினாமா செய்ய முடிவு எடுத்துவிட்டனர். இதனால் அவர்கள் போட்டியிட காவல் துறை சார்பில் எந்த தடையும் இருக்க வாய்ப்பு இல்லை. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் போன்ற உயர் பதவிகளில் இருப்பவர்கள் ஓய்வு பெற்ற பிறகு ஓர் ஆண்டுக்கு எந்த தனியார் நிறுவனத்திலும் சேரக்கூடாது என்ற விதி மட்டுமே உள்ளது. அவர்கள் தேர்தலில் நிற்க தடையில்லை” என்றனர்.

SCROLL FOR NEXT