எடப்பாடி பழனிசாமி: கோப்புப்படம் 
தமிழகம்

அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தொழிற்படிப்புகளில் 7.5% உள் ஒதுக்கீடு: மசோதாவுக்கு அதிமுக வரவேற்பு

செய்திப்பிரிவு

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இளநிலை தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை அதிமுக வரவேற்றுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று (ஆக.26) உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இளநிலை தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், "கிராமப்புற மாணவர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு 2006-ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் தொழிற்கல்விக்கான நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. அரசுப் பள்ளி மாணவர்கள் உயர் கல்வியில் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர். அந்தவகையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இளநிலை தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுகிறது" என்றார்.

முன்னதாக, தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை நிலை குறித்து அறிய, ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் தமிழக அரசு குழு அமைத்தது. பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் உள்ளிட்ட துறைகளில், இளநிலை தொழிற்படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறைவாக இருந்தது அக்குழுவின் ஆய்வில் தெரியவந்தது.

அக்குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இளநிலை தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்க அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டது. இந்நிலையில், இந்த முடிவு மசோதாவாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதாவை அதிமுக ஒருமனதாக வரவேற்பதாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT