தமிழகம்

ரூ.3 லட்சம் வரையான மகளிர் சுயஉதவிக் குழு கடன்களுக்கு வட்டி வீதம் 7 சதவீதமாக குறைப்பு: சட்டப்பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு

செய்திப்பிரிவு

மகளிர் சுய உதவிக் குழுக்களுக் கான ரூ.3 லட்சம் வரையிலான கடன் களுக்கு வட்டி வீதம் 12 சதவீதத் தில் இருந்து 7 சதவீதமாக குறைக் கப்படும். தற்போது வழங்கப்படும் கடன் அளவு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சமாக உயர்த் தப்படும் என்று பேரவையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்தார்.

பேரவையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கை மீது நேற்று விவாதம் நடந்தது. விவாதத்துக்கு பதிலளித்து பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்ட அறிவிப்புகள்:

கூட்டுறவுத் துறை மூலம் பட்டுக் கோட்டை, பர்கூரில் நடத்தப்படும் தொழிற் பயிற்சி கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும். இதனால் 312 ஏழை, எளிய மாண வர்கள் பயன்பெறுவர். அரசுக்கு ஆண்டுக்கு ரூ.22 லட்சத்து 80 ஆயிரம் செலவாகும். கொடைக் கானல் அருகே மன்னவனூர் கிராமத்தில் 20 ஏக்கரில் கூட்டுறவு மேலாண்மை படிப்பு மற்றும் பயிற்சி நிலையம் ரூ.85 கோடியில் அமைக்கப்படும்.

ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 3,331 விற்பனையாளர்கள், 666 கட்டுநர் பணியிடங்கள் நிரப் பப்படும். கூட்டுறவுத் துறை மூலம் அனைத்து மாவட்டங்களிலும் நேரடி கொள்முதல் விற்பனை நிலையங்களை தொடங்க திட்ட மிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக டெல்டா மாவட்டங்களைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் நேரடி கொள்முதல் நிலையங் களை அமைக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு ஏற்படுத்தப் பட்டுள்ளது. 19 மாவட்டங்களில் 68 நேரடி கொள்முதல் நிலையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் தொடங் கப்பட உள்ளன. இது மேலும் விரிவுபடுத்தப்படும்.

மகளிர் சுயஉதவிக் குழுக்களுக் கான ரூ.3 லட்சம் வரையிலான கடன் களுக்கு வட்டி வீதம் 12 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக குறைக்கப் படும். இதனால், தமிழகத்தில் உள்ள 3 லட்சத்து 63 ஆயிரத்து 881 குழுக் களைச் சேர்ந்த 43 லட்சத்து 39 ஆயிரத்து 780 உறுப்பினர்கள் பயன் பெறுவர். மகளிர் குழுக்களுக்கு தற்போது வழங்கப்படும் கடன் அளவு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சமாக உயர்த்தப்படும்.

மாநிலம் முழுவதும் உள்ள 3 லட்சத்து 63 ஆயிரத்து 881 சுய உதவிக் குழுக்களையும் கூட்டுறவு நிறுவனங்களில் உறுப்பினர்களாக சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் 5 சதவீத வட்டியில் கடன் வழங்கப்படும். இத னால் 7 லட்சத்து 40,173 பேர் பயன் பெறுவர். வாடகை கட்டிடங்களில் இயங்கும் ரேஷன் கடைகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டித் தரப்படும். கூட்டுறவு சங்க தயாரிப்பான ஈரோடு மங்களம் மஞ்சள், பென்னாகரம் புளி ஆகியவற்றை அதிக அளவில் சந்தைப்படுத்த நடவடிக்கை எடுக் கப்படும்.

தமிழகத்தில் உள்ள 33 கூட் டுறவு சங்கங்களில் நகைகள், பதி வேடுகளை பராமரிப்பதற்கு ரூ.4 கோடியே 16 லட்சத்தில் பாது காப்புப் பெட்டக பணிகள் மேற் கொள்ளப்படும். கூட்டுறவு வங்கி களில் கூடுதலாக 60 ஏடிஎம் மையங் கள் அமைக்கப்படும். நகர கூட் டுறவு வங்கிகளில் முதல்முறை யாக 10 ஏடிஎம் இயந்திரங்கள் நிறு வப்படும். திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் கூட்டுறவுத் துறை சார்பில் ரூ.20 கோடியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படும்.

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி களுக்கு மதுரை, புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர், தூத் துக்குடி, வேலூர் மாவட்டங்களில் 10 புதிய கிளைகள் தொடங்கப்படும்.

இவ்வாறு கூறினார்.

அதிமுக ஆட்சியில் பயிர்க்கடன் வழங்கியதில் விதிமீறல்

பேரவையில் கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதத்தில் அதிமுக உறுப்பினரான முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசும்போது, ‘‘கடந்த 10 ஆண்டுகள் கூட்டுறவுத் துறையின் பொற்காலமாக இருந்தது. 2011 முதல் 2021 வரை 1.06 கோடி விவசாயிகளுக்கு ரூ.60,640 கோடி வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. குறு, சிறு விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை வைக்க 4,044 கிடங்குகள், ரூ.535.73 கோடி செலவில் கட்டப்பட்டன. 1.58 லட்சம் விவசாயிகளுக்கு தானிய ஈட்டுக்கடனாக ரூ.32,470 கோடி வழங்கப்பட்டது. 16.70 லட்சம் சிறு வியாபாரிகளுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை என ரூ.2,247 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. பலவகை கடன்களாக கடந்த 10 ஆண்டுகளில் 8.22 கோடி பேருக்கு ரூ.4.26 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.42 ஆயிரம் கோடி கடன் வழங்கியுள்ளோம்’’ என்றார்.

அதற்கு பதிலளித்து அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாவது:

கடந்த 2001-06 அதிமுக ஆட்சியில் நஷ்டத்தில் இயங்கிய மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் எல்லாம் திமுக ஆட்சியில்தான் லாபத்தில் இயங்கின. 4 ஆயிரம் கிடங்குகள் கட்டப்பட்டதாக கூறியுள்ளீர்கள். இதில், 90 சதவீதம் நபார்டு நிதியில் கட்டப்பட்டவை. அந்த கிடங்குகளில் பெரும்பாலானவை பயன்பாடின்றி கிடந்தன. தற்போது முதல்வர் பதவியேற்றதும் 5 லட்சம் டன் நெல் மூட்டைகள் அங்கு வைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு நல்ல அரிசி கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது.

வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்தை தொடங்கியதும் முன்னாள் முதல்வர் கருணாநிதிதான். கூட்டுறவு வங்கிகளை கணினிமயமாக்கும் திட்டம் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. ஆனால், அப்பணிகள் தற்போதுவரை முடிக்கப்படவில்லை. தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், மத்திய கூட்டுறவு வங்கிகளுடன் இணைக்கப்படாததால், அவர்கள் இஷ்டத்துக்கு கடன் வழங்கியுள்ளனர். அவ்வாறு பயிர்க்கடன் வழங்கியதில் அதிக அளவில் விதிமீறல்கள் நடந்துள்ளன.

கடந்த 10 ஆண்டுகளில் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி பயிர்க்கடன் இலக்கு நிர்ணயித்து 9.5 சதவீதம்தான் வழங்கியுள்ளீர்கள். திமுக ஆட்சியில் 16 சதவீதம் வரை வழங்கப்பட்டது. தற்போது முதல்வர் உத்தரவுப்படி புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு அதிக அளவில் கடன் வழங்கப்படுகிறது. இதுவரை 2.30 லட்சம் புதிய உறுப்பினர்களுக்கு ரூ.120 கோடி வரை கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ரூ.11,500 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது குறைவு என்றாலும், வரும் ஆண்டுகளில் 25 சதவீதமாக உயர்த்தப்படும்.

அதிமுக ஆட்சியில் கூட்டுறவு சங்கங்களில் தேர்தல் மூலம் யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை; நியமிக்கப்பட்டனர். 1,200 சங்கங்களில் முறையாக தேர்தல் நடக்கவில்லை. சங்கங்களை மூடிவிட்டு, முறைகேடாக தேர்தல் நடத்தப்பட்டது. 400 சங்கங்களில் மறு தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டது.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

பின்னர் பேசிய செல்லூர் ராஜூ, ‘‘ஜனநாயக முறைப்படிதான் கூட்டுறவு சங்க தேர்தல் நடந்தது. எந்த தேர்தலையும் நீதிமன்றம் ரத்து செய்யவில்லை. முறைகேடுகள் ஏதும் நடக்கவில்லை. பயிர்க்கடன் தள்ளுபடியிலும் எந்த தவறும் நடக்கவில்லை’’ என்றார்.

SCROLL FOR NEXT