ரேஷன் கடைகளில் விரைவில் தரமான அரிசி வழங்கப்படும் என்று அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று கூட்டுறவு மற்றும் உணவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் காங்கிரஸ் உறுப்பினர் எஸ்.ராஜேஷ்குமார் பேசும்போது, ‘‘தமிழகத்தில் 5 விதமான குடும்ப அட்டைகள் உள்ளன. இதில், பல அட்டைதாரர்கள், தாங்கள் முன்னுரிமை அட்டைகளுக்கான பயனாளிகளாக இருந்தபோதும், முன்னுரிமை அற்ற குடும்பங்களுக்கான அட்டை தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். இந்த நிலையை மாற்ற வேண்டும். தீபாவளி வரை ஒருவருக்கு 5 கிலோ அரிசி கூடுதலாக வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார். ஆனால், அந்த அரிசி திட்டம் ஜூலை மாதத்துடன் நிறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் புதிதாக அமைந்த திமுக ஆட்சியை குறை கூறி வருகின்றனர். ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி மிகவும் மோசமாக இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்’’ என்றார்.
இதற்கு பதிலளித்து உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி பேசியதாவது:
தமிழகத்தில் தற்போது 2 கோடியே 13 லட்சத்து 80 ஆயிரத்து 112 குடும்ப அட்டைகள் உள்ளன. இவற்றில், முன்னுரிமை பெற்ற குடும்ப அட்டைகளை வசதியுடையவர்கள் பலர் பெற்றிருப்பதும், முன்னுரிமை அற்ற குடும்ப அட்டைகள் வசதி இல்லாதவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதும் தெரியவந் துள்ளளது. இதுகுறித்து தமிழக முதல்வர் 2, 3 முறை ஆய்வுக் கூட்டங்களை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ஆய்வு செய்து அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.
கடந்த ஆட்சியில் பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின்கீழ் அரிசி முழுமையாக வழங்கப்படாமல் உள்ளது. இதுகுறித்தும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். தரமான அரிசியை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்பதற்காக அரிசி ஆலைகளில் ‘கலர் ஷேடிங்’ இயந்திரம் பொருத்த உத்தரவிட்டுள்ளோம். ரேஷன் கடைகளில் விரைவில் தரமான அரிசி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பதிலளித்தார்.