சட்டப்பேரவையில் கூட்டுறவு மற்றும் உணவுத் துறை மீதான மானியக் கோரிக்கைகள் மீது நேற்று நடந்த விவாதம்:
காமராஜ் (அதிமுக): பருப்பு, பாமாயில் கொள்முதலுக்கு ஏலம் விடுவதை ஏனோ தானோ என்று செய்துவிட முடியாது. 3 ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட துணைக் குழு உள்ளது. 10 ஐஏஎஸ் அதிகாரிகளைக் கொண்ட வாரியம் இருக்கிறது. சந்தை விலையைவிட ஒருரூபாய்கூட கூடுதலாக தர முடியாது.கடந்த ஆட்சியில் டெண்டர் விட்டதில் முறைகேடு நடந்திருந்தால் நடவடிக்கை எடுங்கள்.
அமைச்சர் சக்கரபாணி: பருப்பு, எண்ணெய் கொள்முதலுக்கு கடந்த ஆண்டு மே மாதம் என்ன விலைக்கு விற்றதோ அதே விலைக்குத்தான் டெண்டர் போட்டனர். முதல்வர் உத்தரவின்பேரில் அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டு, புதிய டெண்டர் விடப்பட்டது. பருப்பு விலைரூ.120 என குறிப்பிட்டு இருந்தனர். புதிய டெண்டரில் ரூ.76-க்கு வாங்கியதால் அரசுக்கு ரூ.75 கோடி லாபம்.அதுபோல பாமாயிலில் ரூ.5 கோடிலாபம். ஆக மொத்தம் அரசுக்கு ரூ.80 கோடி லாபம் கிடைத்துள்ளது.
எருக்கூரில் ரூ.64 கோடியில் கட்டப்பட்ட சேமிப்பு கிடங்கு 3 ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. அதைக் கட்டியவர்கள் மீதும், அதற்கு துணைபோனவர்கள் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். ராணிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடந்த முறைகேடுகள் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தர விடப்பட்டுள்ளது.
செல்லூர் கே.ராஜூ (அதிமுக):பயிர்க்கடனில் நடந்த முறைகேடுகள் பற்றி அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். அந்த முறைகேடுகள் நடப்பதற்கு நாங்கள் அனுமதிக்கவில்லை. 2016 முதல் 2021வரை பயிர்க்கடனை எப்படி தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வரையறை செய்து கொடுத்திருக்கிறோம். பிப்.5-ம் தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பு கூட்டுறவு மானியக் கோரிக்கை வந்தபோது தள்ளுபடி அறிவிக்கப்பட்டது. பிப்.8-ம் தேதி கூட்டுறவுத் துறை பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பினார். எப்படிப்பட்டவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று விரிவாக அதில் கூறப்பட்டுள்ளது.
அமைச்சர் பெரியசாமி: பிப்.5-ம்தேதி கடன் தள்ளுபடி அறிவித்து,8-ம் தேதிக்குள் சுற்றறிக்கை அனுப்பியதாக உறுப்பினர் கூறுகிறார். இவ்வளவு குறுகிய காலத்தில் 16 லட்சம் பேர் கடன் தள்ளுபடி பெற தகுதியானவர்கள் என்ற பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்தரகசியம் அவருக்குத்தான் தெரியும். தள்ளுபடி செய்யப் போகிறார்கள் என்று முன்னரே தெரிந்துள்ளது.
பெரியகோட்டையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அதிகபட்சம் ரூ.4கோடி வரை கடன் தள்ளுபடி தரலாம். ஆனால், இந்த வங்கியில்ரூ.10 கோடிக்கு கடன் தள்ளுபடிதரப்பட்டுள்ளது. கண்ணொளிக் கிழங்கு விவசாயத்துக்கு ரூ.1.25 லட்சம் கடன் தரலாம். ஆனால், ரூ.3 லட்சம் வரை கடன் கொடுத்துள்ளனர். மக்களின் வரிப்பணம், ஏழைகளுக்கு போக வேண்டிய பணம். கடன் தள்ளுபடி செய்வதற்கு ஒரு அளவு வேண்டாமா? வட்டிக் கடைக்காரர்போல கூட்டுறவு கடன் சங்கத்தை ஆக்கிரமிப்பதை தடுக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.