தமிழகம்

கே.டி.ராகவன் பற்றி வெளியான சர்ச்சை வீடியோ; பாஜக குழு விசாரணையை தொடங்கியது : வீடியோ வெளியிட்ட மதன் ரவிச்சந்திரன் கட்சியில் இருந்து நீக்கம்

செய்திப்பிரிவு

தமிழக பாஜக பொதுச்செயலாளராக இருந்த கே.டி.ராகவன் பற்றி வெளியான சர்ச்சை வீடியோ குறித்து பாஜக குழு விசாரணையை தொடங்கியுள்ளது.

தமிழக பாஜக பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் வாட்ஸ்அப் வீடியோ அழைப்பில் பாஜகவைச் சேர்ந்த பெண்மணி ஒருவரிடம் தவறாகப் பேசுவது போன்ற வீடியோ சமூக வலைதளம் ஒன்றில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து கே.டி.ராகவன் பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் பதவியை நேற்று முன்தினம் ராஜிநாமா செய்தார்.

கே.டி.ராகவன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக பாஜக மாநிலச் செயலாளர் மலர்க்கொடி தலைமையில் சிறப்புகுழுவை தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை நியமித்துள்ளார். இக்குழு ஆரம்பகட்ட விசாரணையை நேற்று தொடங்கியது.

இதுதொடர்பாக மலர்க்கொடியிடம் கேட்டபோது, “கே.டி.ராகவன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து ஆரம்பகட்ட விசாரணையை தொடங்கியிருக்கிறேன். இந்த விசாரணைக் குழுவில் மேலும் சிலர் இணைய உள்ளனர். அவர்களை மாநிலத் தலைவர் அண்ணாமலை விரைவில் அறிவிப்பார்.

குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள கே.டி.ராகவன், வீடியோ அழைப்பில் பேசும் பெண் மற்றும் இதில் தொடர்புடைய அனைவரிடமும் விசாரிப்போம். ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலைக்கு இதுபோன்ற குற்றங்கள் எப்படி, யாரால் நிகழும் என்பதெல்லாம் தெரியும். அவர் எங்கள் விசாரணை குழுவுக்கு ஆலோசனைகள் வழங்குவார். தவறு செய்தவர்கள் யாரும் தப்ப முடியாது" என்றார்.

இந்நிலையில் கே.டி.ராகவன் தொடர்பான சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிட்ட மதன் ரவிச்சந்திரன், வெண்பா ஆகியோர் பாஜகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “பத்திரிகையாளர் மதன் ரவிச்சந்திரன், வெண்பா ஆகியோர் மாநிலத் தலைவர் அண்ணாமலையை சந்தித்து கட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள நடவடிக்கை குழுவுக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

அதேநேரத்தில் பாஜக கொள்கைகளுக்கு முரணாக வீடியோவில் கருத்து தெரிவித்துள்ள மதன் ரவிச்சந்திரன், வெண்பா ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுகின்றனர். பாஜகவினர் யாரும் அவர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது" என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கே.டி.ராகவன் பற்றிய வீடியோ வெளியிட்ட மதன் ரவிச்சந்திரனின் யூ-டியூப் சேனல் முடக்கப்பட்டுள்ளது.

குஷ்பு கருத்து

இந்த விவகாரம் பற்றி கருத்து தெரிவித்துள்ள பாஜக பிரமுகர் குஷ்பு, “பாஜக தேசிய தலைமையும், தமிழக தலைமையும் எனக்கு மரியாதை அளித்து வருகின்றன.

ஆனால், நடந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். அதற்காக பாஜகவில் பெண்களை மதிப்பதில்லை என்று குற்றச்சாட்டுவது வேதனை அளிக்கிறது. பாஜகவில் பெண்கள் பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் இருந்து வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT