தமிழகம்

வாக்குக்குப் பணம்: தடுக்க வேண்டிய பொறுப்பு யாருடையது ? - பொதுமக்கள் கருத்து

செய்திப்பிரிவு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்துக்கு சவால் விடும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக வாக்குக்குப் பணம் கொடுக்கும் விவகாரம் உருவெடுத்துள்ளது. இந்த பிரச்சினையை சமாளிக்க முடியாமல் தேர்தல் ஆணையம் திணறி வரும் நிலையில், இந்த கலாச்சாரத்தை தடுக்கும் பொறுப்பு யாருக்கு அதிகம் உள்ளது என்பது குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

காஞ்சனா, தொண்டு நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளர், சென்னை

பணப்பட்டுவாடாவை தடுத்து நிறுத்துவதில் மக்களுக்கு முக்கியப் பங்கு உள்ளது. 5 ஆண்டுகால எதிர்காலத்தை அற்பமான சிறு தொகைக்கு அரசியல்வாதிகளிடம் அடகு வைக்கக் கூடாது என மக்கள் நினைக்க வேண்டும். வாக்களிக்க காசு வாங்குவது சோரம் போவதற்கு சமம் என ஒவ்வொருவரும் நினைத்து மனம் திருந்தினால் வாக்குக்கு பணம் வழங்கும் கலாச்சாரம் அடியோடு அற்றுப் போகும்.

கே.ஆனந்தன், தொழில் அதிபர், சேலம்

இங்கு மக்கள் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. எந்த மாற்றமும் மக்களிடத்தில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும். மக்களை ஏமாற்றி ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகள் வாக்களிக்க பணம் கொடுப்பது அவர்கள் சுயலாபத்துக்கே தவிர வேறு காரணமில்லை. இதை மக்கள் புரிந்து கொண்டு பணம் வாங்க மறுத்தால், நியாயமான தேர்தலுக்கு வித்திடும். தேர்தல் ஆணையம் ஆயிரம் வேலிகளை அமைத்து தடுப்பு நடவடிக்கை எடுத்தாலும், சுரங்கம் அமைத்து வீடு வீடாக பணம் கொடுக்கும் வித்தகராகவே அரசியல்வாதிகள் இருப்பர். எனவே, ஒட்டுமொத்த மக்களும், ஒரே கருத்துடன் வாக்குக்குப் பணம் வாங்க மறுத்தால் தவறிழைக்கும் அரசியல்வாதிகள் ஓட்டம் பிடிப்பர்.

வித்யாலட்சுமி விபின், வழக்கறிஞர், சென்னை

வாக்குக்குப் பணம் கொடுப்பதை தடுக்கும் பொறுப்பு மக்களிடம் தான் உள்ளது. தேர்தல் ஆணையத்தால் வீடு வீடாக வந்து தடுப்பது சாத்தியம் இல்லை. ஒரு நாட்டின் கட்டமைப்பை சிறப்பாக உருவாக்கும் முக்கிய பொறுப்பு பொதுமக்களுக்கு இருக்கிறது. அரசியல் கட்சிகள் பணம் கொடுத்தால், அதை ஏற்காமல் தவிர்ப்பது, ஒவ்வொரு குடிமகனின் கடமை. அவ்வாறு செய்வதன் மூலம், தேர்தல் நேர்மையாக நடைபெறுவதுடன் நாட்டில் நல்லாட்சியும் அமையும்.

எஸ்.டேனியல், பட்டதாரி, சென்னை

வாக்குக்கு அரசியல் கட்சிகள் பணம் கொடுப்பதை தடுக்கும் மிகப்பெரிய பொறுப்பு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தான் உள்ளது. அது தொடர்பாக, ஆதாரங்களுடன் பொதுமக்கள் புகார்களை ஏற்கெனவே தெரிவித்துள்ளனர். இதுவரை தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்ததில்லை. வாக்களிக்கும் உரிமையைத் தவிர வேறு எந்த அதிகாரமும் பொதுமக்களிடம் இல்லை. தேர்தல் ஆணையமே அதிகாரம் படைத்தது. வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுத்தாலே வாக்குக்குப் பணம் கொடுப்பதை தடுத்துவிட முடியும்.

முகமது நிசார், தனியார் நிறுவன அலுவலர், சென்னை

வாக்குக்குப் பணம் கொடுப்பதை தடுக்கும் முக்கிய பொறுப்பு தேர்தல் ஆணையத்துக்கே உள்ளது. சட்டரீதியான அதிகாரம் கொண்ட அமைப்பும் அதுவே. தேர்தல் ஆணையம் சிபிஐ, துணை ராணுவப் படை, அண்டை மாநில போலீஸாரை தேர்தல் சமயங்களில் பயன்படுத்தி பணப்பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கை எடுக்கலாம். மிகவும் சொற்ப எண்ணிக்கையில் உள்ள அரசியல்வாதிகளை கண்காணிக்க தேவையான நடவடிக்கைகளை தீவிரமாக எடுக்க வேண்டும். தவறிழைத்தவர்களை பாரபட்சமின்றி தண்டித்தால் பணப்பட்டுவாடா பெருமளவு குறையும்.

சி.ஞானசேகரன், தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர், வேலூர்

ஒவ்வொரு தேர்தல் வரும்போதும் வாக்குக்குப் பணம் கொடுப்பது அரசியல் நாகரிகமாக மாறிவிட்டது. இதை மக்கள் தான் தடுத்து நிறுத்த வேண்டும். வாக்குகளை விற்கமாட்டோம் என அரசியல் கட்சிகளிடம் நேரடியாக கூற வேண்டும். மக்கள் மனது வைத்தால் இது சாத்தியமாகும். இதற்கான விழிப்புணர்வை முதலில் மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். அதேநேரத்தில், பணம் பட்டுவாடா செய்வதை தேர்தல் ஆணையம், அரசு அதிகாரிகள் கண்காணித்து தடுக்க வேண்டும்.

சு.சண்முகவேலன், சமூக ஆர்வலர், திருநெல்வேலி

வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுப்பதில் முக்கிய பங்கு ஒவ்வொரு வாக்காளருக்கும் உள்ளது. ஒவ்வொரு தனிமனிதனும் வாக்குக்குப் பணம் கேட்பதில்லை என்ற தீர்க்கமான முடிவுக்கு வந்துவிட்டால் இந்த பிரச்சினையே எழாது. என்னதான் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தாலும் மக்கள் மத்தியில் மாற்றம் இல்லாவிட்டால் பயனில்லை. அரசியல் கட்சிகள் தங்களது வெற்றிக்காக பணம் கொடுக்க தயாராகவே இருப்பார்கள். ஆனால் மக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக வாங்க மறுத்தால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.

ஏ.எஸ்.அஸ்கர், ஆடிட்டர், செஞ்சி

வாக்காளர்கள் மனம் வைத்தால் மட்டுமே வாக்குக்குப் பணம் கொடுக்கும் கலாச்சாரத்தை ஒழிக்க முடியும். ‘வாக்குரிமையை எக்காரணம் கொண்டும் விற்க மாட்டோம். என் வாக்கு, என் உரிமை’ என்ற நிலைப்பாட்டை மக்கள் மனதில் கொள்ள வேண்டும். வாய் பேசாமலும், பார்வையற்றவர்களாக இனியும் வாழமாட்டோம் என ஒவ்வொரு குடிமகனும் முடிவெடுத்தால் மட்டுமே இந்நிலை ஒழியும்.

ஆர்.வீரராகவன், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் காரைக்குடி

தேர்தலில் பணப்புழக்கத்தை தடுப்பதில் முதல் கடமை தேர்தல் ஆணையத்துக்கு உண்டு. அடுத்து வாக்காளர்களாகிய பொதுமக்களுக்கும் உண்டு. பணம் பெற்றுக் கொண்டு வாக்களிப்பதே தவறு என்ற விழிப்புணர்வு கல்வி அறிவு இல்லாத கிராம மக்களை சென்றடையவில்லை. இன்றைய அரசியலானது கொள்கை, கோட்பாடு இல்லாமல் வெறும் தொழிலாக உள்ளது. கொள்கை இல்லாத அரசியல்வாதிகள் வியாபாரிகளாக நடந்து கொள்கின்றனர். அரசியல்வாதிகள் பணம் கொடுத்து பிடிபட்டால் அவர்கள் பதவியைப் பறிக்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும்.

ப்ரியா கோவிந்தராஜ், சாமுந்திரிகா அகாடமி, திருச்சி

தேர்தல் என்பதே உண்மையானவரை, மக்களுக்காக உழைப்பவரை நாம் தேர்ந்தெடுக்கவே நடத்தப்படுகிறது. ஆனால், அண்மைக்காலமாக வாக்காளர்களுக்கு பணம் அளித்து வாக்குகளை பெறும் போக்கு அதிகரித்து வருவது ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்கிறது.

அரசியல்வாதிகள், அதிகாரிகள் இதைத் தடுக்க முடியாது. இந்த இழி செயலை மக்கள் தான் எதிர்க்க வேண்டும். பணம் கொடுக்க வருபவர்களை விரட்டி அடித்தால் அடுத்தவர்கள் வர அஞ்சுவார்கள். மக்களின் கையில் தான் அனைத்தும் உள்ளது. எனவே, மக்கள் தங்களது மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்.

SCROLL FOR NEXT