தமிழகம்

மழை நீர் சேகரிப்பு தொட்டிக்காக பள்ளம் தோண்டியபோது மண் சரிவில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு: தீயணைப்பு படையினர் முயற்சியால் 2 பேர் பத்திரமாக மீட்பு

செய்திப்பிரிவு

மழை நீர் சேகரிப்பு தொட்டிக்காக பள்ளம் தோண்டியபோது ஏற்பட்ட மண் சரிவில் சிக்கிய தொழிலாளி, 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். முன்னதாக 2 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

பழைய வண்ணாரப்பேட்டை, தாண்டவராய முதலி தெருவில், தனியார் கண் மருத்துவமனை உள்ளது. இங்கு, அதே பகுதியைச் சேர்ந்த மணி என்பவர் தலைமையில், மழை நீர் சேகரிப்பு தொட்டிக்காக பள்ளம் தோண்டும் பணி நடந்தது. அந்த பணியில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சின்னத்துரை (22) அவரது நண்பர்களான அதே மாவட்டத்தைச் சேர்ந்த வீரப்பன் (55), ஆகாஷ் (22) ஆகியோர் நேற்று ஈடுபட்டிருந்தனர்.

சுமார் 15 அடி ஆழம், 6 அடி அகலம் கொண்ட பள்ளத்தை தோண்டிக்கொண்டு இருந்தபோது, திடீரென மண் சரிந்தது. வீரப்பன், ஆகாஷ், சின்னத்துரை ஆகியோர் பள்ளத்துக்குள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மண் மூடியது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

செம்பியம், தண்டையார்பேட்டை பகுதிகளில் இருந்து தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் மற்றும் காவல் துறையினர் இணைந்து சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மீட்புப் பணியின்போது மண் சரிவு ஏற்படாமல் இருக்க பள்ளத்தில் உறைகள் இறக்கப்பட்டன.

தொழிலாளிகளுக்கு சுவாசக் காற்று கிடைக்க ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் காற்று குழிக்குள் செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து வீரப்பன், ஆகாஷ் ஆகியோர் அடுத்தடுத்து உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

சின்னத்துரையை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு அவரும் மீட்கப்பட்டார். ஆம்புலன்ஸுடன் தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் சின்னத்துரைக்கு முதலுதவி அளித்தனர். பின்னர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் சின்னதுரை ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த மண் சரிவு விபத்து தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். உயிரிழந்த சின்னத்துரைக்கு திருமணமாகி 4 மாதங்கள் மட்டுமே ஆவதாக போலீஸார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT