புதுச்சேரி, காரைக்காலில் பெட்ரோல் மீதான வாட் வரியை 3 சதவீதத்தை குறைக்க துணைநிலை ஆளுநர் தமிழிசை ஒப்புதல் தந்துள்ளார்.
அத்துடன் வரும் செப்.1 முதல் பள்ளிகள் செயல்பட உள்ளதால் ஆயத்தப்பணிகளை செய்ய வரும் 26ம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்கவும் அனுமதி தந்துள்ளார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை முக்கிய கோப்புகளுக்கு இன்று இரவு ஒப்புதல் தந்துள்ளார்.
அதன் விவரம்:
மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர நிதியுதவித் தொகையை அதிகரிப்பதற்காக, மாற்றுத் திறனாளிகள் நிதியுதவிக்கான விதிகளில் திருத்தம் செய்யும் சமூகநலத் துறையின் வரைவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 86% முதல் 100% வரை நிரந்தர ஊனமுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவி ரூ. 3 ஆயிரத்திலிருந்து ரூ. 3,500 ஆக உயரும். 66% முதல் 85% வரை நிரந்தர ஊனமுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவி ரூ. 2 ஆயிரத்திலிருந்து ரூ. 2500 ஆகவும், 40% முதல் 65% வரை நிரந்தர ஊனமுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவி ரூ. 1,500ல் இருந்து ரூ. 2000 ஆகவும், குறைபாட்டின் அளவில பாகுபாடு இல்லாமல் 60 வயதுக்கு மேல் 79 வயது வரை உள்ள நிரந்தர ஊனமுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு, ரூ2,200த்திலிருந்து ரூ. 2700 ஆகவும், குறைபாட்டின் அளவில பாகுபாடு இல்லாமல் 80 வயது கடந்த நிரந்தர ஊனமுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு, ரூ. 3300த்திலிருந்து ரூ.3,800 ஆகவும் உயர்த்த ஒப்புதல் தந்துள்ளார்.
புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் முதல் பதிவாளரைத் தேர்ந்தெடுப்பதற்கு, தலைமைச் செயலரைத் தலைவராகவும், கல்வித்துறைச் செயலர், புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், காரைக்கால் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்டு அமைக்ப்பட்டுள்ள தேர்வுக் குழுவிற்கு ஒப்புதல் தந்துள்ளார்.
பிரதம மந்திரியின் வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் 573 அட்டவனை இனப் பயனாளிகள் வீடுகள் கட்ட (திருத்தப்பட்ட இலக்கு 530 வீடுகள்) இரண்டாவது தவணையாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைக்கு ரூ.184.80 லட்சம் மானியம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளார்.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் உள்ள சிபிஎஸ்இ / ஐசிஎஸ்இ உள்ளிட்ட அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 01.09.2021 முதல் நேரடி வகுப்புகளைத் தொடங்கும் வகையில் அதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள 26.08.2021 முதல் பள்ளிகளைத் திறக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தாமாக முன்வந்து பள்ளிகளுக்கு வர விரும்புவதால், 2021-22 கல்வியாண்டில் மாற்று நாட்களில் பள்ளிகள் காலை 9 மணி முதல் மதியம் 1.00 மணி வரை (அரை நாள்) வாரத்தில் 6 நாட்கள், கோவிட் -19 தொடர்பாக வழிகாட்டு நடைமுறைகள் பின்பற்றி செயல்படும். 9, 11, 12ம் வகுப்புகளுக்கு திங்கள், புதன் மற்றும் வெள்ளியும், 10ம் வகுப்புகளுக்கு செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளிலும் இயங்க அனுமதி தரப்பட்டுள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் விற்கப்படும் பெட்ரோல் மீதான 3% வாட் வரியை குறைப்பதற்கான அமைச்சரவை முடிவுக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது. இதனால், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2.43 குறையும். அதன்படி, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு லிட்டரின் விலை புதுச்சேரியில் ரூ. 99.52 ஆகவும், காரைக்காலில் ரூ. 99.30 ஆகவும் குறையும்.