தமிழகம்

பூ கட்டும் நாரால் தீ விபத்து: 12 குடிசை வீடுகள் எரிந்து சேதம்

வி.சுந்தர்ராஜ்

திருவையாறு அருகே இன்று காலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 12 குடிசை வீடுகள் தீயில் எரிந்து சேதமாகின.

திருவையாற்றை அடுத்த மேலத்திருப்பூந்துருத்தி புதுத்தெருவைச் சேர்ந்த கூத்தையன் மகன் தர்மராஜ் (54) என்பவர் வீட்டில் பூ கட்டும் வாழை நார் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதில் எதிர்பாராத விதமாகத் தீப்பிடித்து எரிந்தது. இந்தத் தீ வேகமாகப் பரவியதால், பக்கத்து வீடான கர்ணன் (50) என்பவரின் வீட்டிலும் தீப்பிடித்து சிலிண்டர் வெடித்தது. அதனைத் தொடர்ந்து தீ அருகில் இருந்த அஞ்சலை (60), ராஜேஸ்வரி (50), முருகேசன் (54), பூபதி (50), சைவராஜ் (65), கல்யாணி (55), முருகேசன் (28), மலர்க்கொடி (54), கீழத்திருப்பூந்துருத்தியைச் சேர்ந்த தனலெட்சுமி (40), சாந்தி (48) ஆகிய 12 பேர் வீடுகளையும் எரித்து நாசமாக்கியது.

தீப்பிடித்த 12 வீடுகளிலும் துணிகள், மளிகைப் பொருட்கள், தளவாடப் பொருட்கள், பீரோ, கட்டில், டிவி, பணம், நகை உள்பட சுமார் ரூ.6 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமாகின.

தகவல் அறிந்ததும் திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு நிலைய வீரர்கள் சென்று தீயை மேலும் பரவாமல் அணைத்தனர். இந்தத் தீ விபத்தில் பூபதி (50) என்பவருக்கு மட்டும் லேசான தீக்காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றார்.

தகவல் அறிந்ததும் தஞ்சாவூர் வருவாய்க் கோட்டாட்சியர் வேலுமணி, திருவையாறு வட்டாட்சியர் நெடுஞ்செழியன், ஒன்றியக் குழுத் தலைவர் அரசாபகரன், பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார், திமுக ஒன்றியச் செயலாளர் கௌதமன், நகரச் செயலாளர் அகமது மைதீன் ஆகியோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர். மேலும் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 12 குடும்பங்களுக்கும் தலா ரூ.5 ஆயிரம் பணம், வேட்டி, சேலை, அரிசி, மண்ணெண்ணெய் ஆகியவற்றை வழங்கி ஆறுதல் கூறினர்.

இந்தத் தீ விபத்து குறித்து நடுக்காவேரி காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன் விசாரணை நடத்தி வருகிறார்.

SCROLL FOR NEXT