மதுரையில் அமையவுள்ள கருணாநிதி பெயரிலான நூலகம் குறித்த விவாதம் சட்டப்பேரவையில் எழுந்தது.
2021-2022ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. இன்று (ஆக. 25) சட்டப்பேரவையில், மதுரையில் பென்னிகுயிக் வாழ்ந்த இல்லத்தில் கருணாநிதி பெயரிலான நூலகம் அமையவிருப்பதாகத் தகவல்கள் வருவதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசினார்.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், "நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது எவ்வளவு குறுக்கீடு வந்தது என நினைவில் உள்ளது. இருப்பினும், குறுக்கீடு வேண்டாம் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
குறிப்பிட்ட அந்த இல்லம், பென்னி குயிக் உடைய இல்லம் அல்ல. பென்னி குயிக் மரணம் அடைந்த வருடம் 1911. அந்த இல்லம் கட்டப்பட்டது 1912-ல் இருந்து 1915 வரை. எனவே, அந்த இல்லம் பென்னி குயிக் இல்லமாகவே இருந்திருக்க முடியாது. இவ்வளவு தெளிவான கருத்தைக் கொடுத்த பிறகு, உறுப்பினர் தவறான கருத்தைப் பதிவு செய்யக்கூடாது. அதற்காக மட்டும்தான் நான் குறுக்கீடு செய்கிறேன். இல்லையென்றால் நான் குறுக்கீடு செய்யமாட்டேன்" எனத் தெரிவித்தார்.
இதன்பின், பேசிய முதல்வர் ஸ்டாலின், "ஏற்கெனவே இந்த விவகாரம் சட்டப்பேரவைக்கு வெளியேயும் பேசப்பட்டுள்ளது. அப்போதும் பொதுப்பணித்துறை அமைச்சர் வாயிலாக தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நீங்கள் சொல்வதற்கு ஆதாரம் இருந்தால், நிச்சயம் இந்த அரசு அடிபணிவதற்குக் காத்திருக்கிறது. அதனை நாங்கள் மாற்றுவதற்குத் தயாராக இருக்கிறோம். எந்தவித ஆதாரமும் கிடையாது.
ஒரு தவறான பிரச்சாரத்தைச் செய்கின்றனர். சட்டப்பேரவையில் இது பதிவாகக் கூடாது என்பதற்காக இந்த விளக்கத்தைச் சொல்கிறேன். 'பென்னி குயிக் வாழ்ந்ததாக சொல்வதாக' என உறுப்பினர் கூறுகிறார். நீங்கள் முன்னாள் அமைச்சராக இருந்தவர். மூன்றாவது முறை சட்டப்பேரவை உறுப்பினராகி உள்ளீர்கள். இப்படிச் சொல்வது உங்களின் பெருந்தன்மையைக் குறைப்பதாக உள்ளது" எனத் தெரிவித்தார்.