தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் விஞ்ஞானி பா.கீதா இன்று (ஆக. 25) வெளியிட்ட அறிவிப்பு:
"வெப்பச் சலனம் காரணமாக இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், திண்டுக்கல், நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு (சென்டி மீட்டரில்):
தஞ்சாவூர் 14, பள்ளிப்பட்டு (திருவள்ளூர்) 9, திருத்தணி (திருவள்ளூர்) 6, மடத்துக்குளம் (திருப்பூர்) 4, சோளிங்கர் (ராணிப்பேட்டை), வாணியம்பாடி (திருப்பத்தூர்), சோலையாறு (கோவை) தலா 3, பாண்டவையாறு (திருவாரூர்), உதகமண்டலம் தலா 2, வேதாரண்யம் (நாகப்பட்டினம்), மாரண்டஹள்ளி (தருமபுரி), அமராவதி அணை (திருப்பூர்), தாளவாடி (ஈரோடு), எம்ஜிஆர் நகர் (சென்னை) தலா 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
அரபிக் கடல் பகுதிகள்
25.08.2021 முதல் 29.08.2021 வரை: தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்".
இவ்வாறு கீதா தெரிவித்துள்ளார்.