தமிழகம்

மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது: முதல் நாளில் 3 சுயேச்சைகள் மனு தாக்கல்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.

கடந்த 2019 ஜூலையில் அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அ.முகமது ஜான், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த மார்ச் 23-ம் தேதி காலமானார். இதனால் அவர் வகித்த மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியானது.

இந்த ஓரிடத்தை நிரப்புவதற்காக வரும் செப்டம்பர்13-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்தல் அறிவிக்கை நேற்று வெளியிடப்பட்டு, வேட்புமனு தாக்கலும் தொடங்கியது. முதல் நாளில் கே.பத்மராஜன், அக்னி ராமச்சந்திரன், கோ.மதிவாணன் ஆகிய 3 சுயேச்சைகள் தேர்தல் அதிகாரியும், சட்டப்பேரவை செயலாளருமான கி.சீனிவாசனிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இதில் பத்மராஜன் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டில்எங்கு தேர்தல் நடைபெற்றாலும் வேட்புமனு தாக்கல் செய்வதைவழக்கமாக கொண்டவர். விதிகளின்படி எம்எல்ஏக்கள் வேட்புமனுக்களை முன்மொழியாததால் இவர்களது மனுக்கள் தள்ளுபடிஆவது உறுதியாகியுள்ளது.

ஆளும் திமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எம்.எம்.அப்துல்லா இன்னும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. வரும் 31-ம் தேதி வரைவேட்புமனுக்கள் தாக்கல் செய்யலாம்.

போட்டி இருந்தால் செப்டம்பர் 13-ம் தேதி திங்கள்கிழமை காலை 9 முதல் மாலை 4 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். அன்றைய தினம் மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ஒரு இடத்துக்கு மட்டும் தேர்தல் நடப்பதால் அதிக எம்எல்ஏக்களைக் கொண்ட ஆளும் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு உறுதியாகியுள்ளது.

SCROLL FOR NEXT