ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்ததை தொடர்ந்து கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமத்தில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் குவிகின்றனர். இதனால் கன்னியாகுமரி களைகட்டியுள்ளது. அதேநேரம் திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை நீடிப்பதால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மையங்கள், கடற்கரை பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் மக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் 4 மாதங்களுக்கு பின்னர் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் நேற்று கன்னியாகுமரி வந்தனர்.
விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு படகு சவாரி செல்ல படகு இல்லத்தில் நேற்று காலை முதல் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். சமூக இடைவெளியுடன் வரிசையில் அவர்களை நிற்க வைத்து டிக்கெட் வழங்கப்பட்டது. படகில் சென்ற சுற்றுலா பயணிகள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
காட்சிக் கோபுரம், காந்தி மண்டபம், காமராஜர் மணி மண்டபத்தை அதிகமானோர் பார்வையிட்டனர். சூரிய உதயம், அஸ்தமனத்தை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கானோர் கூடினர். இதனால் கடற்கரை பகுதி களைகட்டியது. கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், சுசீந்திரம் கோயில்களிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
அருவிகளில் குளிப்பதற்கு தடை நீடிப்பதால் கடந்த 2 நாட்களாக திற்பரப்பு அருவிக்கு சென்ற சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். அதேநேரம் திற்பரப்பு அருவியின் மேல்பகுதியில் கடையாலுமூடு பஞ்சாயத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் படகு இல்லம் மூலம் அதிகமான சுற்றுலா பயணிகள் படகு சவாரி மேற்கொண்டனர்.
திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என அப்பகுதி வியாபாரிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக குமரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை விடுக்க வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர்.