காஞ்சிபுரத்தை அடுத்த வேடலில் தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தேமுதிகவின் திருப்புமுனை மாநாடு நடைபெறவுள்ள நிலையில், "இந்த மாநாட்டில் தேமுதிக தலைமையிலான புதிய கூட்டணிக்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்பிருக்கிறது" என பிரேமலதா விஜய்காந்த் தெரிவித்துள்ளார்.
வேடலில் நடைபெறவுள்ள மாநாட்டு ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக தேமுதிக மகளிர் அணித் தலைவரும் கட்சித் தலைவர் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா வந்திருந்தார்.
அவரிடம் பத்திரிகையாளர் ஒருவர் தேமுதிக தலைமையில் கூட்டணி அமைய வாய்ப்பிருக்கிறதா என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த பிரேமலதா, "இருக்கலாம். ஒவ்வொரு கட்சியும் கூட்டணி ஆலோசனையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் எதையும் உறுதியாக இறுதியாக சொல்ல முடியாது. தேர்தல் தேதி அறிவித்த பின்னரே யார் எந்த கட்சியுடன் கூட்டணியில் களம் காண்பர் என்பது குறித்த தெளிவான நிலை ஏற்படும். இருப்பினும், தற்போது நிலவும் சூழலில் வலுவான கூட்டணிக்கான சாத்தியக்கூறுகளை மறுப்பதற்கு இல்லை" என்றார்.
அண்மையில் பிரேமலதா, திமுக - காங்கிரஸ் கூட்டணியை விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தூண்டிலில் சிக்குமா?
தேமுதிக கூட்டணிக்காக பாஜக, மக்கள் நலக் கூட்டணி, திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆகியன காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் நிலையில் இன்றைய திருப்புமுனை மாநாடு அக்கட்சியினரிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணி குறித்த முக்கிய அறிவிப்பை விஜயகாந்த் வெளியிடலாம் என்ற எதிர்பார்ப்பில் அவர்கள் உள்ளனர்.
திருப்புமுனை மாநாடு திருப்பத்தை ஏற்படுத்தட்டும் என வாழ்த்திவிட்டு காத்திருக்கிறது மக்கள் நலக் கூட்டணி. விஜயகாந்த் கூட்டணி ஆலோசனைக்கு வந்தால் நல்ல முடிவு கிட்டும் என்ற நம்பிக்கை வாக்கியத்துடன் காத்திருக்கிறது திமுக. தேமுதிக எங்களுடன் தான் இருக்கிறது என்று சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறது பாஜக. தேமுதிக பாஜகவைப் புறக்கணித்தால் தமிழகத்தில் அக்கட்சி தனித்துவிடப்படும் சூழல் ஏற்படக் கூடும்.
இந்நிலையில், தேமுதிக எந்த கூட்டணி தூண்டிலில் சிக்கும். இல்லை நழுவி தன் தலைமையிலான கூட்டணியை அமைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
'பலத்தை காட்டுங்கள்'
தேமுதிக மாநாட்டில் முழு பலத்தையும் காட்டுமாறு கட்சியின் மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறதாம். "இன்று திரளும் கூட்டமே எங்கள் கட்சியின் பலம். இதன் மூலம் தேமுதிகவின் வலிமையை மற்ற கட்சிகளுக்கு எடுத்துரைக்க விரும்புகிறோம். தேமுதிகவின் பலம் சற்றும் குன்றவில்லை என்பதை அறிவிக்க விரும்புகிறோம்" என தேமுதிக எம்.எல்.ஏ ஒருவர் கூறினார்.