தமிழகம்

ஜெ. பிறந்த நாளில் கட்-அவுட் கலாச்சாரத்தால் மக்கள் அவதி: ராமதாஸ்

செய்திப்பிரிவு

ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்கு பல நாட்கள் முன்பாகவே சென்னை முழுவதும் ஆயிரக்கணக்கான வாழ்த்துப் பதாகைகளை அதிமுகவினர் அமைத்துள்ளனர் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. ஜெயலலிதா நீண்ட காலம் வாழ வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அதேநேரத்தில் தலைவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மற்றவர்கள் வாழ்த்தும் வகையில் அமைய வேண்டுமே தவிர வெறுக்கும் வகையில் அமையக்கூடாது.

ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும், குறிப்பாக சென்னையில் மிக அதிக எண்ணிக்கையில் பதாகைகளும், கட்-அவுட்டுகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு நிகழ்ச்சி நடப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பு தான் பதாகைகள் வைக்கப்பட வேண்டும்; நிகழ்ச்சி முடிந்து இரு நாட்களில் அவை அகற்றப்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பளித்துள்ளது.

ஆனால், இந்த தீர்ப்பை மதிக்காமல் ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்கு பல நாட்கள் முன்பாகவே சென்னை முழுவதும் ஆயிரக்கணக்கான வாழ்த்துப் பதாகைகளை அதிமுகவினர் அமைத்துள்ளனர். சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் நடைபாதைகளை ஆக்கிரமித்து தான் பதாகைகள் அமைக்கப் பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் சாலைகளில் இறங்கிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பல பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.

ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி சென்னையின் பல பகுதிகளில் நேற்றும், இன்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழாக்கள் சாலைகளை தடுத்து நடத்தப்பட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சென்னை பல்லவன் இல்லம் அருகில் அதிமுக தொழிற்சங்கம் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிக்காக அண்ணா சாலையையும், சென்ட்ரல் ரயில் நிலையத்தையும் இணைக்கும் சாலை முற்றிலுமாக மூடப்பட்டது. இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தண்டையார்பேட்டை பகுதியில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்காக மக்கள் கூட்டம் முண்டியடித்ததால் பலர் மயங்கி விழுந்தனர். கூட்ட நெரிசலில் பல மின் விளக்குகள் உடைந்தன. சாலையை ஆக்கிரமித்து நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சிக்காக போக்குவரத்து திருப்பி விடப்பட்டதால் பொதுமக்கள் 3 கி.மீ தூரம் வரை நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. புழல் பகுதியில் ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சிக்காக அரசு பள்ளிக்கு கட்டாய விடுமுறை விடப்பட்டுள்ளது.

தலைவர்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும். இந்தியாவின் விடுதலைக்காக போராடிய மகாத்மா காந்தி கடைசி வரை பிறந்த நாள் கொண்டாடியதில்லை. தமிழகத்தை 10 ஆண்டுகள் ஆட்சி செய்ததுடன், பிரதமர்களை உருவாக்குபவராக திகழ்ந்த காமராஜர் பிறந்த நாளை கொண்டாடியது கிடையாது.

தமிழகத்தில் திராவிடக் கட்சி ஆட்சியை உருவாக்கிய அண்ணா உயிருடன் இருந்தவரை அவரது பிறந்த நாள் என்றைக்கு என்பது திமுக தொண்டர்களுக்குத் தெரியாது. அண்ணாவுக்குப் பிறகு வந்த திராவிடக் கட்சித் தலைவர்கள் தான் தங்களின் பிறந்த நாளை தங்கள் செல்வாக்கைக் காட்டுவதற்கான விழாவாக கொண்டாடும் கலாச்சாரத்தை ஊக்குவித்தனர்.

அதிலும், மிக பிரம்மாண்டமாக பிறந்த நாள் விழாவைக் கொண்டாடியவர்களுக்கும், மிக அதிக மதிப்பில் பிறந்த நாள் பரிசு வழங்கியவர்களுக்கும் தான் கட்சியிலும், ஆட்சியிலும் மிக உயர்ந்த பொறுப்புகள் கிடைக்கும் என்ற எழுதப்படாத சட்டத்தை அவர்கள் இயற்றியதன் விளைவு தான் தமிழ்நாட்டில் தலைவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் மக்களால் வெறுக்கப்படும் நிகழ்வுகளாக மாறிவிட்டன.

உங்களுக்காகவே வாழ்கிறேன்... உங்களுக்காகவே தியாகங்களை செய்கிறேன் என்று வாட்ஸ்-அப் செய்தி முதல் மேடைப்பேச்சு வரை அனைத்திலும் முதல்வர் சொல்கிறார். ஆனால், அவரின் கவனத்தை ஈர்த்து பதவிகளைப் பெறுவதற்காக அதிமுகவினர் நடத்தும் அட்டகாசங்களைத் தாங்க முடியவில்லை. இவற்றை ஜெயலலிதாவின் மர்மப் புன்னகையுடன் ரசித்து மகிழ்வது தான் வேதனையான உண்மை.

திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளைத் தவிர தமிழகத்தில் வேறு எந்தக் கட்சித் தலைவர்களும் இத்தகைய பிறந்த நாள் கொண்டாட்டங்களை நடத்துவதாகத் தெரியவில்லை. இந்தக் கட்சிகளின் தலைவர்கள் மக்களுக்காக பல தியாகங்களை செய்ததாக கூறுகின்றனர். அவை உண்மை எனில் இனிவரும் காலங்களில் மக்களை பாதிக்கும் வகையிலான பிறந்த நாள் கொண்டாட்டங்களையும் தியாகம் செய்ய வேண்டும்.

அரசியல் கட்சிகள் என்றாலே தொல்லை தருபவை என மக்கள் வெறுத்து ஒதுங்கும் நிலையை மாற்றி, கண்ணியமான அரசியலை நடத்த தமிழக கட்சிகள் முன்வர வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT