தமிழகம்

ரவிச்சந்திரன் பரோல் வழக்கில் புதிய மனுத் தாக்கல் செய்ய உத்தரவு

கி.மகாராஜன்

ராஜீவ் காந்தி கொலைக் கைதி ரவிச்சந்திரன் பரோல் கேட்டுள்ள வழக்கில் புதிதாக மனுத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ரவிச்சந்திரன் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுள் தண்டனைக் கைதியாக மதுரை மத்தியச் சிறையில் உள்ளார். இவரது தாயார் ராஜேஸ்வரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

''ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை 2018 செப். 9-ல் தீர்மானம் நிறைவேற்றியது.

கரோனா பரவல் காரணமாக ரவிச்சந்திரனுக்கு 3 மாதம் பரோல் வழங்கக்கோரி மனு அனுப்பினேன். ஆனால் மத்திய அரசின் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டுள்ளதால் பரோல் வழங்க முடியாது என சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதே காரணத்துக்காக ஏற்கெனவே ஒரு முறை பரோல் மறுக்கப்பட்டதை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

ரவிச்சந்திரன் 27 ஆண்டுக்கு மேலாக சிறையில் நன்னடத்தையுடன் உள்ளார். அவருக்கு 2 மாதம் பரோல் வழங்க உத்தரவிட வேண்டும்''.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் பாரதிதாசன், நிஷாபானு அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள், ''கரோனா பரவலைக் காரணம் காட்டி இப்போது பரோல் விடுப்பு கேட்க முடியாது. சரியான விதிகளின் அடிப்படையில் புதிய மனு தாக்கல் செய்யலாம்'' எனத் தெரிவித்தனர்.

மனுதாரர் வழக்கறிஞர் திருமுருகன் வாதிடுகையில், ''ரவிச்சந்திரன் தாயாருக்குக் கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனால் தாயாரைக் கவனிப்பதற்காக பரோல் விடுப்புக் கேட்டு விண்ணப்பம் தரப்பட்டு நிலுவையில் உள்ளது'' என்று தெரிவித்தார். இதையடுத்து தனி மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஒரு வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

SCROLL FOR NEXT