இரா.முத்தரசன்: கோப்புப்படம் 
தமிழகம்

மத்திய அரசு பொதுச் சொத்துகளைச் சூறையாடுகிறது: முத்தரசன் கண்டனம்

செய்திப்பிரிவு

மத்திய அரசு பொதுச் சொத்துகளைச் சூறையாடுவதாக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (ஆக.24) வெளியிட்ட அறிக்கை:

"பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தி, பொது நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட பொதுத்துறைகளைத் தனியார் மயப்படுத்தும் நடவடிக்கைகளைத் தீவிரமாக்கியுள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களுக்குச் சொந்தமான கட்டிடங்களை, நிலையங்களை, நிலங்களை விற்று ரூபாய் ஆறு லட்சம் கோடி அளவுக்கு நிதி திரட்டுவது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

சென்னை, திருச்சி உள்ளிட்ட விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், நெடுஞ்சாலை எனப் பல்வேறு இடங்களில் அரசுக்கும், பொதுத்துறைக்கும் சொந்தமான மக்களின் சொத்துகளைத் தனியாருக்கு விற்பது மக்களின் சொத்துகள் மீது அரசே நடத்தும் சட்டபூர்வ கொள்ளையாகும். இது நாட்டின் சுயசார்பை ஆணிவேருடன் பிடுங்கி எறியும் அபாயகரமான நடவடிக்கையாகும்.

இந்தத் தீய விளைவுகளை உருவாக்கும் மக்கள் விரோத, தேச விரோதக் கொள்கைகளை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாகக் கண்டிப்பதுடன் மக்கள் உரிமை பெற்ற பொதுச் சொத்துகளை விற்பதை உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறது".

இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT